மின்சிகரெட்டுகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்தில் சிங்கப்பூர் உயர்நிலைப்பள்ளிகள் முயற்சிகளை இரட்டிப்பாக்கியுள்ளன.
பண்பியல்பு, குடியுரிமைக் கல்வி மற்றும் அறிவியல் பாடங்கள் வழி மின்சிகரெட்டுகளின் தீங்கு, அவற்றை எவ்வாறு முறியடிக்கலாம் என்பன போன்ற முக்கியக் கூறுகளை உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கற்றுக்கொள்வார்கள்.
பிரெஸ்பெட்டேரியன் உயர்நிலைப்பள்ளியில் அக்டோபர் 22ஆம் தேதி செய்தியாளர்கள் முன்னிலையில் இந்த இரண்டு வகுப்புகள் நடத்தப்பட்டன.
பண்பியல்பு, குடியுரிமைக் கல்வி வகுப்பில் மாணவர்கள் சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அவர்கள் சந்திக்கக்கூடிய உண்மை வாழ்க்கைச் சூழ்நிலைகளைப் பற்றிக் கலந்துரையாடினார்கள்.
நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவர் மின்சிகரெட்டுகள் பயன்படுத்தினால் என்ன செய்யலாம் என்பது போன்ற சூழ்நிலைகள் அவர்களிடம் முன்வைக்கப்பட்டன.
இந்தப் பாடங்கள் வழி மாணவர்கள் மீள்திறன் உட்பட மின்சிகரெட் பயன்பாட்டைத் தவிர்த்து, ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை மேற்கொள்வது பற்றியும் கற்றுக்கொள்கிறார்கள் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.
வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு ஏற்ப இந்தப் பாடங்கள் வடிவமைக்கப்படுகின்றன என்று தெரிவித்தார் பிரெஸ்பெட்டேரியன் உயர்நிலைப்பள்ளியின் பண்பியல்பு, குடியுரிமைக் கல்விப் பாடத் தலைமை ஆசிரியர் ஹ்ஷியே சூ ஆன்.
“இந்தப் பாடங்கள் மூலம் மாணவர்களுக்குத் தகவல்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் சரியான தேர்வுகளைச் செய்ய அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் விரும்புகிறோம்,” என்றார் திருவாட்டி ஹ்ஷியே.
தொடர்புடைய செய்திகள்
மின்சிகரெட்டுகளில் காணப்படும் எட்டோமிடேட், அதனால் உடல் அளவிலும் மனத்தளவிலும் ஏற்படும் ஆபத்துகளை அறிவியல் பாடம் எடுத்துரைக்கும் என்றும் அமைச்சு தெரிவித்தது.
அறிவியல் சோதனைகள் வழி எட்டோமிடேட் எவ்வாறு தீங்கு விளைவிக்கிறது என்பதையும் மாணவர்கள் அறிந்துகொண்டனர்.
அவ்வாறு கற்றதை மீண்டும் மாணவர்களிடம் வலியுறுத்த, வகுப்பின் இறுதியில் ஆசிரியர்கள் ஒரு சிறிய வினாடி வினா அங்கத்தை வழிநடத்தினார்கள்.
மின்சிகரெட் பயன்பாடு பற்றிப் பொதுவாக நிலவும் தவறான கருத்துகளைப் போக்கி, மாணவர்கள் துல்லியமான தகவல்களைப் பெறுவதை அறிவியல் பாடங்கள் உறுதி செய்கின்றன என்றார் பிரெஸ்பெட்டேரியன் உயர்நிலைப்பள்ளியின் அறிவியல் பாடத்திற்குப் பொறுப்பு ஆசிரியரான ஹெங் ஹுய் பெங்.
சிங்கப்பூரில் மின்சிகரெட்டுகள் வைத்திருப்பது, விற்பது மற்றும் பயன்படுத்துவது சட்டவிரோதமானது. இருப்பினும் இளையர்கள் மத்தியில் இந்தப் புழக்கம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.
2022ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை, தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக்கல்லூரிகள் மற்றும் மில்லேனியா கல்விநிலையத்தில் சராசரியாக ஆண்டுதோறும் சுமார் 3,100 மாணவர்கள் மின்சிகரெட் குற்றங்களுக்காகப் பிடிபட்டனர்.
பண்பியல்பு, குடியுரிமைக் கல்வி வகுப்பில் மின்சிகரெட்டுகள் எவ்வாரு ஒரு தனிநபர் மட்டுமல்லாமல் அவரது குடும்பச் சூழல் முழுவதையும் பாதிக்கிறது என்று கற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார் உயர்நிலை மூன்றில் பயிலும் மாணவர் அபிஜித்.
“மின்சிகரெட்டுகளால் அதிக பாதிப்பு இல்லை என்பது தவறான கருத்து. அதில் நிறைய தீங்கு விளைவிக்கும் பொருள்கள் உள்ளன என்று வகுப்பில் கற்றுக்கொண்டேன்,” என்றார் அவர்.
மின்சிகரெட்டுகளால் பாதிக்கப்படுவோருக்கு எவ்வாறு உதவலாம் என்பதைப் பற்றியும் இந்த வகுப்புகள் எடுத்துக் கூறுகின்றன என்று தெரிவித்தார் உயர்நிலை மூன்றில் பயிலும் மாணவி ஜுவாலா.
“மின்சிகரெட் பற்றிய தகவல்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் தேவைப்படுவோருக்கு ஓரளவு உதவலாம்,” என்றார் அவர்.
மின்சிகரெட்டுகள் குறித்த விழிப்புணர்வை விரிவுபடுத்தும் பண்பியல்பு, குடியுரிமைக் கல்வி வகுப்புகள் உயர்நிலை 2 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், அறிவியல் வகுப்புகள் எல்லா உயர்நிலை மாணவர்களுக்கும் கற்பிக்கப்படும் என்று அமைச்சு தெரிவித்தது.

