சிங்கப்பூரின் ஆறு தன்னாட்சி பல்கலைக்கழகங்களில் மின்சிகரெட்டுகளை வீசுவதற்கான தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இளையர்களிடையே அதிகரிக்கும் மின்சிகரெட் பயன்பாட்டைக் களைய தேசிய அளவில் எடுக்கப்படும் முயற்சிகளில் அதுவும் ஒன்று.
சுகாதார அறிவியல் ஆணையமும் மக்கள் கழகமும் நடத்தும் ‘பின் த வேப்’ இயக்கத்தின் ஒரு பகுதியாகப் பல்கலைக்கழகங்களில் மின்சிகரெட் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
மின்சிகரெட்டுகளை அந்தத் தொட்டிகளில் வீசுவோர்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது. மின்சிகரெட் பயன்பாட்டைக் கைவிட முயல்வோருக்கு அத்தகைய தொட்டிகள் ஆதரவளிப்பதாக சிங்கப்பூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் குறிப்பிட்டது.
ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தனது வளாகத்தில் தற்போது ஒரு தொட்டியை வைத்துள்ளது. கூடுதல் தொட்டிகள் தேவைப்படுமா என்பதை அவை மதிப்பிடுகின்றன. மின்சிகரெட் தொட்டிகள் குறித்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் கடந்த வாரம் அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டது.
மின்சிகரெட்டுகளுடன் பிடிபட்ட மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2022ல் 800 மாணவர்கள் பிடிபட்டனர். அந்த எண்ணிக்கை 2023ல் 900ஆகவும் கடந்த ஆண்டு 2,000ஆகவும் கூடியது.
ஆறு பல்கலைகழகங்களும் மின்சிகரெட் பயன்பாட்டைக் கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்தன.
மின்சிகரெட்டுடன் பிடிபடும் மாணவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த அவை, தாமாக முன்வந்து அவற்றை ஒப்படைத்து மின்சிகரெட் பழக்கத்தைக் கைவிட விரும்பும் மாணவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றது.
மின்சிகரெட் பற்றிய விழிப்புணர்வையும் அதுகுறித்த அமலாக்க நடவடிக்கைகளையும் அதிகரிக்க பல்கலைக்கழகங்கள் திட்டமிட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
மின்சிகரெட் பயன்பாட்டுக்காகப் பிடிபடும் மாணவர்கள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என்று சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம் குறிப்பிட்டது. வளாகத்தில் தங்கியிருக்கும் மாணவர்கள் தங்கள் அறைகளிலிருந்து நீக்கப்படலாம் என்றும் அது எச்சரித்தது.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் மின்சிகரெட் பயன்பாடு சட்டவிரோதம் என்றும் அதன் ஆபத்துகள் பற்றியும் தெரிவிக்கிறது. வளாகத்தில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கும் அதுகுறித்து அவ்வப்போது நினைவூட்டப்படுகிறது.