சிங்கப்பூரில் 15,000க்கும் மேற்பட்ட மின்சிகரெட் சாதனங்களை விநியோகித்த ஓட்டுநர் ஒருவருக்கு எட்டு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஓரிசன் தோ சன் கீ, 29, எனப்படும் அவர், டெலிகிராம் தளம் வழியாக மின்சிகரெட்டுகளை விற்க முயன்ற குற்றத்தையும் விற்பனைக்கான மின்சிகரெட்டுகளை வைத்திருந்த குற்றத்தையும் ஒப்புக்கொண்டார்.
அவர் மீது சுமத்தப்பட்ட மேலும் இரு குற்றச்சாட்டுகள், தண்டனை விதிப்பின்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.
அவருக்கு ஒரு வார சிறையும் $1,500 அபராதமும் விதிக்குமாறு தொடக்கத்தில் அரசுத்தரப்பு கேட்டுக்கொண்டது.
பின்னர் அதனை 12 வாரம், $3,000 என அது மாற்றியது. இதற்கு முன்னர், 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி, எல்லாவிதமான மின்சிகரெட் குற்றங்களுக்கும் பரிந்துரைக்கப்பட்ட தண்டனைகளை மீண்டும் பரிசீலிக்குமாறு சுகாதார அறிவியல் ஆணையத்திடம் நீதிபதி தெரிவித்ததைக் கவனத்தில் கொண்டு, அரசுத்தரப்பு பழைய கோரிக்கையைத் திருத்தி அதிகத் தண்டனை கோரியது.
மின்சிகரெட் குற்றங்களுக்கு 2022ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை விதிக்கப்பட்ட தண்டனையின் அடிப்படையில் தற்போது தண்டனையைப் பரிசீலிப்பது சாத்தியமல்ல என்று அப்போது நீதிபதி வோங் லி தெய்ன் குறிப்பிட்டிருந்தார்.
அந்த அடிப்படையில், தொடக்கத்தில் அரசுத்தரப்பு கேட்டதைக் காட்டிலும் எட்டு மடங்கு அதிகமான சிறைத் தண்டனையைப் புதன்கிழமை (ஜனவரி 7) நீதிமன்றம் விதித்தது.
குற்றம் நிகழ்ந்தபோது, தோ ஒரு பொறியாளராக வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டார். பின்னர், 2024 பிப்ரவரியில் மின்சிகரெட் பொட்டலங்களை விநியோகிக்கத் தொடங்கினார்.
தொடர்புடைய செய்திகள்
ஒவ்வொரு விநியோகத்திற்கும் அவர் அப்போது கிட்டத்தட்ட $10 வாங்கினார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அவரது செயல் தொடர்ந்து வந்த வேளையில், 2025 செப்டம்பர் 2ஆம் தேதி நிறுவனம் ஒன்றில் மின்சிகரெட் அடங்கிய சரக்குப் பையை வைத்திருந்தது சுகாதார அறிவியல் ஆணையத்தின் கவனத்துக்குச் சென்றது.
மறுநாள் அதிகாரிகள் அங்கு சென்றபோது, அந்த சரக்குப் பையை தோ வாங்கியதைக் கண்டனர். அதனைத் தொடர்ந்து அவரது காரில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது 1,639 மின்சிகரெட்டுகள் காருக்குள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவை உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டன.

