மின்சிகரெட் குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடும் இளைஞர்களுக்கு எதிரான நடவடிக்கைகள், அரசாங்க அமைப்புகளால் கடுமையாகவும் விரைவாகவும் எடுக்கப்படும்.
இதனை சுகாதார அமைச்சர் ஓங் யீ காங், செம்பவாங் சென்ட்ரல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) ஏற்பாடு செய்யப்பட்ட மெதுநடை நிகழ்வில் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மின்சிகரெட்டுகளில் போதைப்பொருள் கலந்திருப்பது குறித்த புகார்கள் எழுந்தன. அதனால் அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்க அமைப்புகள் முடுக்கிவிட்டன.
மின்சிகரெட் குற்றங்களுக்காகத் தொடர்ந்து பிடிபடும் இளைஞர்களை, முதல் குற்றத்திலிருந்தே கண்காணித்து, அவர்கள்மீது விரைவாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.
மறுவாழ்வு பயிற்சியில் கலந்துகொண்டபோது அதேகுற்றத்திற்கு மூன்றுமுறை கைது செய்யப்பட்ட பல இளையர்கள் உள்ளடங்கியத் தொடர் குற்றவாளிக் கும்பல் ஒன்று உருவெடுத்துள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அந்தக் குழுவை அதிகாரிகள் கவனித்து வருகின்றனர். போதைப் பொருள்களுக்கு அடிமையாகி, இளையர்கள் வாழ்க்கையை அழித்துக்கொள்வதை தடுக்க வேண்டும் என்றார் அமைச்சர்.
சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளது பற்றி கருத்துரைத்த அமைச்சர், தற்காலிகச் செயல்பாடுகள் அதிகமானோருக்குப் பயன்பட்டாலும் தொடர் குற்றவாளிகள் உருவாவதை எதிர்பார்க்கத்தான் வேண்டும் என்றார்.
தற்போதைய நடைமுறைப்படி, ஒவ்வொரு முறையும் மின்சிகரெட் குற்றங்களுக்காகப் பிடிபடுவோருக்கு எதிரான நடவடிக்கை படிப்படியாகக் கடுமையாகும் எனக் குறிப்பிட்டார் அமைச்சர் ஓங்.
தொடர்புடைய செய்திகள்
முதல்முறை மின்சிகரெட் குற்றங்களுக்காகப் பிடிபடுவோருக்கு அபராதமும் இரண்டாம் முறை குற்றம் செய்வோருக்கு சிறுநீர் சோதனை போன்ற தண்டனைகள் வழங்கப்படுகின்றன. மூன்றாம் முறை குற்றஞ்சாட்டப்படுவோர் போதைப்பொருள் மறுவாழ்வு இல்லத்திற்கு அனுப்பிவைக்கப்படுவர்.
மே மாதம் 1ஆம் தேதி முதல் புகையிலை, ஆவிநுகர்தலுக்கு எதிரான கடுமையான புதிய சட்டங்கள் அமலாக்கப்படும். அவற்றில் ஒன்றான அபராதத் தொகை, தற்போது உள்ள $2,000 என்பதிலிருந்து ஐந்து மடங்காகி $10,000என உயர்த்தப்படும்.

