பொங்கோலில் எட்டோமிடேட் கேபாட்களை கடத்தியதாகக் கூறப்படும் 25 வயது ஆடவர்மீது மே 19ஆம் தேதி குற்றம்சாட்டப்பட்டது.
ரகசியத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து மே 17ஆம் தேதி பொங்கோலில் உள்ள முஹமட் டேனியல் முஹமட் ஷாஹ்ரியின் வீட்டைச் சோதனையிட்டதாக மே 27ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது.
அந்தச் சோதனையில் 39 கேபாட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் எட்டோமிடேட் கலந்திருந்தது என்று தெரிவித்த ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்திவருவதாகக் கூறியது.
சந்தேக நபர், விசாரணைக்காக ஒரு வாரம் காவலில் வைக்கப்பட்டார். அது, தொடர்பான நீதிமன்ற விசாரணை மே 26ஆம் தேதி நடைபெற்றது. பின்னர் அது ஜூலை 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவற்றை இறக்குமதி செய்தவருக்கு மூன்று முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ஐந்து முதல் 15 வரை பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
விநியோகித்தோர், இரண்டு முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையையும் இரண்டு முதல் ஐந்து வரை பிரம்படிகளையும் எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

