மலேசியாவில் உள்ள மின்சிகரெட் கடத்தல் கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர் என்று சந்தேகிக்கப்படும் ஆடவர், கடந்த ஏறத்தாழ ஓராண்டுக்குச் சிங்கப்பூரில் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதியன்று தீவெங்கும் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.
அதில் மலேசியரான சுவா வீ மிங் கைது செய்யப்பட்டார்.
2022ஆம் ஆண்டிலிருந்து அவர் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மோசடி, விசாரணைக்கு இடையூறு விளைவித்தல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை 34 வயது சுவா எதிர்நோக்குகிறார்.
மின்சிகரெட்டுகளை மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் கொண்டு வந்து அவற்றை விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளை சுவா செய்ததாகவும் அவர் மலேசியாவில் உள்ள மின்சிகரெட் கடத்தல் கும்பலின் முக்கிய உறுப்பினர் என்றும் காவல்துறையும் சுகாதார அறிவியல் ஆணையமும் கூட்டறிக்கை மூலம் தெரிவித்தன.
2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் தேதியன்று சுவாவும் இன்னோர் ஆடவரும் சேர்ந்து செம்பவாங்கில் உள்ள சரக்குக் கிடங்கிற்குள் அத்துமீறி நுழைந்து மின்சிகரெட்டுகளைத் திருடியதாகக் கூறப்படுகிறது.
அப்போதுதான் சுவாவின் பெயர் முதன்முதலாக வெளியானது என்று அதிகாரிகள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
சரக்குக் கிடங்கிலிருந்து தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள் திருடப்பட்டதாக அந்தச் சரக்குக் கிடங்கிற்குப் பொறுப்பு வகித்த லிம் சீ வெய் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
ஆனால் அங்கிருந்து $470,000 பெறுமானமுள்ள மின்சிகரெட்டுகள் திருடப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
மின்சிகரெட்டுகளைப் பொட்டலம் கட்டி, விநியோகம் செய்து, விற்பனை செய்ததை லிம் ஒப்புக்கொண்டார்.
அவருக்கு $8,500 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட மின்சிகரெட்டுகளைத் திருட சுவா முயன்றதாகக் கூறப்படுகிறது.
அவற்றின் மதிப்பு $6.5 மில்லியனுக்கும் அதிகம்.
அந்த மின்சிகரெட்டுகள் சுகாதார அறிவியல் ஆணையம் பயன்படுத்திய சரக்குக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன.
அந்தச் சரக்குக் கிடங்கு மைக்கல் ஆண்டனி பிள்ளை என்பவரின் பொறுப்பின்கீழ் இருந்தது.
சுகாதார அறிவியல் ஆணையம் நடத்த இருந்த அதிரடிச் சோதனைகள் குறித்து சுவாவுக்குப் பிள்ளை பலமுறை தகவல் அளித்ததாகவும் அதற்காக அவர் $8,000 லஞ்சம் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பான குற்றச்சாட்டைப் பிள்ளை எதிர்நோக்குகிறார்.
சுவா தொடர்பான வழக்குக்கு முந்தைய கலந்துரையாடல் செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.