விபத்து, அவசரகாலப் பிரிவில் பணியாற்றி மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றும் மருத்துவர் ஒருவரின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டது.
உட்லண்ட்ஸ் ஹெல்த்தில் மூத்த மருத்துவ ஆலோசகராகப் பணிபுரியும் 56 வயது டாக்டர் கிறிஸ்டஃபர் வோங் தமது கூட்டுரிமைக் குடியிருப்பில் டென்னிஸ் விளையாடிக்கொண்டிருந்தபோது அவருக்கு இதயச் செயலிழப்பு ஏற்பட்டது.
நல்ல வேளையாக அவருடன் அவரது மூன்று நண்பர்களும் இருந்தனர்.
அந்த மூவரும் மருத்துவர்கள்.
அவர்கள் உட்லண்ட்ஸ் ஹெல்த்தைச் சேர்ந்த மூத்த மருத்துவ ஆலோசகர்களான 47 வயது டாக்டர் சோகில் பொதியாவாலா, 52 வயது இணைப் பேராசிரியர் அமிலா புண்யதாசா மற்றும் டான் டோக் செங் மருத்துவமனையைச் சேர்ந்த மூத்த ஆலோசகரான 54 வயது இணைப் பேராசிரியர் கென்னத் ஹெங்.
இந்த நால்வரும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்களாக இருந்து வருகின்றனர்.
2020ஆம் ஆண்டிலிருந்து அவர்கள் நால்வரும் வாரத்துக்கு ஒருமுறை ஒன்றாக டென்னிஸ் விளையாடுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த மே மாதம் 19ஆம் தேதியன்று புக்கிட் தீமாவில் உள்ள தமது கூட்டுரிமைக் குடியிருப்பில் தமது நண்பர்களுடன் டென்னிஸ் விளையாடிக்கொண்டிருந்தபோது தமக்கு மயக்கமாக இருந்ததாகவும் தண்ணீர் அருந்திய பிறகு சுயநினைவு இழந்ததாகவும் டாக்டர் வோங் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
நாடித் துடிப்பு இல்லாததை உணர்ந்த அவரது நண்பர்கள் அதிர்ந்தனர்.
இணைப் பேராசிரியர் அமிலாவும் டாக்டர் சோகிலும் டாக்டர் வோங்கிற்கு உடனடியாக சிபிஏ முதலுதவி சிகிச்சை வழங்கினர்.
ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் அவர்கள் இருவரும் மாறி மாறி டாக்டர் வோங்கிற்கு சுவாச சிகிச்சை வழங்கினர்.
இது நடந்துகொண்டிருந்தபோது இணைப் பேராசிரியர் ஹெங் ஆம்பலன்சை அழைத்தார்.
டாக்டர் வோங்கின் கூட்டுரிமைக் குடியிருப்பில் ஏஇடி இயந்திரம் (மின்சாரம் பாய்ச்சி இதயத்தை மீண்டும் துடிக்க வைக்கப் பயன்படுத்தப்படும் இயந்திரம்) இல்லாததால் அருகில் இருந்த மற்றொரு கூட்டுரிமை வீட்டிற்கு ஓடிச் சென்று அதை எடுத்துக்கொண்டு டாக்டர் வோங்கை நோக்கி இணைப் பேராசிரியர் ஹெங் விரைந்தார்.
அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி டாக்டர் வோங்கின் இதயத்தை மீண்டும் துடிக்க வைக்க அந்த மூவரும் முயன்றனர்.
இந்நிலையில், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் அவ்விடத்தை அடைந்தனர்.
அவர்கள் ஏஇடி இயந்திரத்தைப் பயன்படுத்தி டாக்டர் வோங்கின் இதயத்தை மீண்டும் துடிக்க வைத்தனர்.
ஒருவழியாக, டாக்டர் வோங்கிற்குச் சுயநினைவு திரும்பியது.
அவர் உடனடியாக டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சிகிச்சை பெற்று அவர் குணமடைந்ததும் இரண்டு நாள்கள் கழித்து அவர் வீடு திரும்பினார்.
டாக்டர் வோங்கின் உயிரைக் காப்பாற்றிய அவரது மூன்று நண்பர்களுக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் உயிர்க்காப்பாளர் விருது கடந்த ஜூலை மாதம் வழங்கப்பட்டது.
இதுபோன்ற ஒரு நெருக்கடிநிலை ஏற்பட்டால் முதலுதவி வழங்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும் 3,000க்கும் மேற்பட்டோருக்குத் திடீரென்று இதயச் செயலிழப்பு ஏற்படுவதாக சிங்கப்பூரர் இதய அறநிறுவனத்தின் இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதயச் செயலிழப்பு காரணமாக ஒருவர் சுயநினைவு இழக்கும்போது அவருக்கு உடனடியாக சிபிஆர் முதலுதவி மற்றும் ஏஇடி இயந்திரம் பயன்படுத்தி சிகிச்சை வழங்கினால் அவர் உயிர் பிழைக்கும் சாத்தியம் 50 விழுக்காடு வரை உயர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்கள் பயன்படுத்த ஏதுவாக கடந்த செப்டம்பர் மாதம் நிலவரப்படி, சிங்கப்பூரில் ஏறத்தாழ 11,300 ஏஇடி இயந்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஸட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.