வரும் பொதுத் தேர்தலில் மேரிமவுண்ட் தனித்தொகுதியில் தனது கட்சி சார்பில் ஜெஃப்ரி கூ போட்டியிடுவார் என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி (பிஎஸ்பி) அறிவித்து உள்ளது.
பீஷான் நார்த் கடைத்தொகுதியில் வியாழக்கிழமை (ஏப்ரல் 17) காலை செய்தியாளர்களிடம் பேசிய அந்தக் கட்சியின் நிறுவனரும் தலைவருமான டான் செங் போக் வேட்பாளர் அறிவிப்பை வெளியிட்டார்.
திரு கூ, 2020 பொதுத் தேர்தலில் வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் பேட்டியிட்டவர். ஐந்து வேட்பாளர்களைக் கொண்ட அந்தக் குழுத்தொகுதியில் அப்போது மக்கள் செயல் கட்சிக்கு சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி கடும் போட்டி கொடுத்தது.
அதன் காரணமாக, முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் தலைமையிலான மக்கள் செயல் கட்சி அணி 51.59 என்னும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
அந்தக் குழுத் தொகுதியில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சிக்குக் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் அக்கட்சியைச் சேர்ந்த லியோங் மன் வாய், ஹேஸல் புவா ஆகிய இருவருக்கு தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.
வரும் பொதுத் தேர்தலில் கெபுன் பாரு, பைனியர், மேரிமவுண்ட் ஆகிய தனித்தொகுதிகளிலும் வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட், சுவா சூ காங் ஆகிய குழுத்தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 12) அறிவித்து இருந்தது.

