சிங்கப்பூர் நிறுவனங்களை அங்கீகரித்த இ50 விருதுகள்

2 mins read
1c4b48c8-9127-4368-9226-9adf6bd7353a
31வது என்டர்பிரைஸ் 50 விருதுகள் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிறந்த பொருளியல் சூழலிலும், ஏற்கெனவே உயர்ந்த நிலையில் உள்ள சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடுத்தடுத்த ஆண்டுகளில் மிதமான அளவில்தான் வளர்ச்சி அடையக்கூடும் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ திங்கட்கிழமை (நவம்பர் 24) தெரிவித்துள்ளார்.

உலகளாவிய விநியோகச் சங்கிலி மாற்றங்கள், புவிசார் அரசியல் அழுத்தம் தொடங்கி கடுமையான போட்டி, மின்னிலக்கச் சீர்குலைவு, அதிகரித்துவரும் நிலைத்தன்மை எதிர்பார்ப்புகள் வரையிலும் இன்று நிறுவனங்கள் புதிய தலைமுறைச் சவால்களை எதிர்கொள்வதாக அமைச்சர் டியோ கூறினார்.

ரிசார்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 31வது என்டர்பிரைஸ் 50 (இ50) விருதுகள் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திருவாட்டி டியோ உரையாற்றினார்.

‘மீள்திறன்மிக்க ஒரு தேசத்தை உருவாக்குதல்: முன்னேற்றத்தின் தூண்களான நிறுவனங்கள்’ என்ற கருப்பொருளைக் கொண்ட இவ்வாண்டு விருது விழா, நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்குச் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ள 50 நிறுவனங்களைச் சிறப்பித்தது.

31வது என்டர்பிரைஸ் 50 விருதுகள் நிகழ்ச்சியில் விருது பெற்ற நிறுவனங்களின் பேராளர்களும் நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினர்களும்.
31வது என்டர்பிரைஸ் 50 விருதுகள் நிகழ்ச்சியில் விருது பெற்ற நிறுவனங்களின் பேராளர்களும் நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினர்களும். - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

இந்த விருது நிகழ்விற்கு பிஸ்னஸ் டைம்ஸ், கேபிஎம்ஜி சிங்கப்பூர் நிறுவனம் ஆகியவை இணைந்து ஆண்டுதோறும் ஏற்பாடு செய்துவருகின்றன.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களைச் சுட்டிய திருவாட்டி டியோ, அவை உருவாக்கும் வாய்ப்புகளையும் வலியுறுத்தினார்.

“வட்டாரத்தில் ஏற்பட்டுவரும் வளர்ச்சி, விரிவடைந்துவரும் மின்னிலக்கப் பொருளியல், பசுமைத் தொழில்துறைகளுக்கு மாறுதல் ஆகியவை தனித்துவமான திறன்களையும் அத்துடன் நம்பிக்கைக்குரிய நிறுவனங்களுக்கு அரிய வாய்ப்புகளையும் வழங்குகின்றன,” என்று அவர் குறிப்பிட்டார்.

நீண்ட காலமாக நிலைத்திருக்கும் சிங்கப்பூர்த் தொழில்துறையின் மதிப்புடன் மின்னிலக்கத் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு ஆகியவை இணையும்போது நிறுவனங்கள் மேலும் பயன்பெற முடியும் என்றும் திருவாட்டி டியோ கூறினார்.

இவ்வாண்டிற்கான விருது விழா, சிங்கப்பூரின் மிகவும் துணிகரமிக்க, தனியார்துறையைச் சேர்ந்த 50 நிறுவனங்களை அங்கீகரித்தன. இதில் போ ஹெங் ஜுவல்லரி, பொல்லிசம் குழுமம், இயூ ஹாலிடேஸ் ஆகியவை முறையே முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்தன.

பயனீட்டாளர் மின்னணுப் பொருள்கள் விநியோகிக்கும் ‘ஜெனரேஷன் நெக்ஸ்ட் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ உள்ளிட்ட மொத்தம் மூன்று நிறுவனங்கள் ஐந்து முறை இ50 விருதுகள் பெற்றதற்காக ஐந்தாண்டு விருதைப் பெற்றன.

பயனீட்டாளர் மின்னணுப் பொருள்கள் விநியோகிக்கும் ‘ஜெனரேஷன் நெக்ஸ்ட் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கைலாஷ் சிவகுமார் குப்தா (இடது)  உட்பட ஐந்தாண்டு விருதைப் பெற்ற மூன்று நிறுவனங்களின் பேராளர்கள்.
பயனீட்டாளர் மின்னணுப் பொருள்கள் விநியோகிக்கும் ‘ஜெனரேஷன் நெக்ஸ்ட் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கைலாஷ் சிவகுமார் குப்தா (இடது) உட்பட ஐந்தாண்டு விருதைப் பெற்ற மூன்று நிறுவனங்களின் பேராளர்கள். - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

மற்ற வெற்றியாளர்களில், என்சர்ச் குளோபல் பிரைவேட் லிமிடெட், ஸ்பேஸ் மேட்ரிக்ஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட், சிங் ஃபியூவல்ஸ் பிரைவேட் லிமிடெட், பிக்-ஃபூட் லாஜிஸ்டிக் பிரைவேட் லிமிடெட், இன்டர்லாக் செக்யூரிட்டி அண்ட் இன்வெஸ்டிகேஷன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், சுப்ரீம் காம்போனென்ட்ஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களும் அடங்கும்.

அதிக எண்ணிக்கையிலான சிறிய, நடுத்தர நிறுவனங்கள் காலத்திற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்வதோடு, நிலைத்தன்மை, புதிய கண்டுபிடிப்புகள் போன்ற துறைகளில் நிறுவனத்தின் எதிர்காலத்தை வடிவமைக்க மேலும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று பிஸ்னஸ் டைம்ஸ் நாளிதழ் ஆசிரியர் சென் ஹுய்ஃபென் தமது உரையில் கூறினார். இதன்வழி, சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக்குச் சிறப்பான பங்களிப்புகள் அவை வழங்குகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இவ்விருதுகள் எங்கள் தொழில் சமூகத்தை மேம்படுத்தவும் அவற்றின் மீள்திறன் சிறப்பைக் கொண்டாடவும் ஒரு தளமாகத் தொடர்ந்து செயல்படும் என்று நம்புகிறேன்,” என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்