கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில், ஃபாத்தின் ஃபாத்திஹா என்பவர் தமது மகனுக்குக் கைக்குழந்தைகள், சிறுவர்களுக்கான ஆரம்பகாலத் தலையீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்தார்.
விண்ணப்பம் செய்த ஒரு மாதத்திலேயே தமது மகனுக்கு அரசாங்க மானியம் பெறும் திட்டத்தில் இடம் கிடைத்தது அவருக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
திட்டத்திற்கு முதலில் விண்ணப்பித்தபோது காத்திருப்புக் காலம் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என்று ஃபாத்திஹா கேள்விப்பட்டிருந்தார். ஆனால் விரைவாக மகனுக்கு இடம் கிடைத்தது மறக்க முடியாத அனுபவம் என்றார் அவர்.
ஃபாத்திஹாவின் மகன் ஸெய்னுக்கு 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடர்புத்திறன் குறைபாடு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது. அதன் பிறகு அவரை ‘எஸ்ஜி எனேபல்’ தொடர்பு கொண்டது. 2024 அக்டோபருக்குள், அவருக்கு உதவித் திட்டத்தில் இடம் கிடைத்தது.
அண்மை ஆண்டுகளாகக் கைக்குழந்தைகள், சிறுவர்களுக்கான ஆரம்பகாலத் தலையீட்டுத் திட்டத்தின் காத்திருப்புக் காலம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் பல குடும்பங்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.
கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட எழுத்துபூர்வப் பதிலின்படி, திட்டத்தில் இடம்பெறுவதற்காகக் குழந்தைகள் காத்திருக்கும் சராசரி காலம் 2023ஆம் ஆண்டு 7.5 மாதங்களாக இருந்தது. இது 2025ல் 5.5 மாதங்களாகக் குறைந்துள்ளது.
ஒரு குழுவாக அமர்ந்து கற்கும் சூழலில் நடுத்தர முதல் உயர் மட்டம் வரை வளர்ச்சி தேவைப்படும் குழந்தைகளுக்கு ஆரம்பகாலத் தலையீட்டுத் திட்டம் மூலம் ஆதரவு அளிக்கப்படும்.
சிங்கப்பூர் அரசாங்கம் இத்திட்டத்தின் சேர்க்கையைக் கிட்டத்தட்ட 25 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதாவது இடங்களின் எண்ணிக்கையை 5,800லிருந்து 7,300 ஆகக் கூட்டியுள்ளது.
குழந்தையின் வளர்ச்சிப் பருவத்தில் ஆரம்பகால ஆதரவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த முக்கிய ஆண்டுகளில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டுமோ என்று கவலைப்பட்ட பல பெற்றோருக்கு இந்தக் குறைந்த காத்திருப்புக் காலம் ஒரு நிம்மதியைத் தந்துள்ளது.
ஆரம்பகாலத் தலையீட்டுத் திட்டத்திற்கான இடத்திற்காகக் காத்திருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டு 2,600 ஆக இருந்தது. அது 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி 1,400 ஆக, அதாவது பாதியாகக் குறைந்துள்ளது என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

