தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எதிர்காலத்தை ஒளிமயமாக்க விளக்குகள் அணைப்பு: பூமிக்காக ஒரு மணி நேரம்

3 mins read
3e69ce05-9ab9-4c0e-b451-244d31207a6a
வருங்காலச் சந்ததிக்கு ஒளிகொடுக்கும் நோக்கில் சிறிது நேரம் ஒளியைத் துறந்த செந்தோசா வட்டாரம். - படம்: உலக வனவிலங்கு நிதியம்

இயற்கைச் சமநிலை சீர்குலைந்ததன் விளைவுகளை உலகம் நேரடியாக உணரத் தொடங்கியுள்ளதாக உலக வனவிலங்கு நிதியத்தின் சிங்கப்பூர் பிரிவுக்கான (WWF Singapore) தலைமை நிர்வாக அதிகாரி விவேக் குமார் கூறியுள்ளார்.

ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதி சனிக்கிழமையில் கடைப்பிடிக்கப்படும் ‘பூமிக்காக ஒரு மணி நேரம்’ எனும் நிகழ்ச்சியில் பேசியபோது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த இருபது ஆண்டுகளாக ‘உலக வனவிலங்கு நிதியம் சிங்கப்பூர்’ ‘பூமிக்காக ஒரு மணி நேரம்’ நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்நிகழ்ச்சியில் ஒரு மணிநேரத்துக்கு மின்விளக்குகள் அணைக்கப்படும்.

இந்த ஆண்டு இந்நிகழ்ச்சி மார்ச் 22ஆம் தேதி காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை ‘செந்தோசா சென்சரிஸ்கேப்’பில் (Sentosa Sensoryscape) நடைபெற்றது.

நீடித்த நிலைத்தன்மைக்கான ஒத்துழைப்பை வெளிக்காட்டும் வண்ணம் மரினா பே சேண்ட்ஸ், கரையோரப் பூந்தோட்டம் உள்ளிட்ட முக்கிய இடங்களும் நிறுவனங்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று விளக்குகளை அணைத்தன.

‘பூமிக்காக ஒரு மணிநேரம்’ நிகழ்ச்சி நடைபெறும் நாள், பருவநிலை மாற்றத்தின் தாக்கம் வெகுதொலைவில் இல்லை என்பதை உணர்த்தும் சக்திவாய்ந்ததாக விளங்குகிறது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் ‘லிங்க்ட்இன்’ தளத்தில் பதிவிட்டார்.

இயற்கைக்காக மனிதன் ஒதுக்கும் ஒரு மணிநேரம் ஏற்படுத்தும் தாக்கத்தின் மூலம் நீண்டகால வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்த முயல்கிறது இம்முன்னெடுப்பு.

நீடித்த நிலைத்தன்மை குறித்துப் பொதுமக்களிடம் விளக்கும் உலக வனவிலங்கு நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விவேக் குமார்.
நீடித்த நிலைத்தன்மை குறித்துப் பொதுமக்களிடம் விளக்கும் உலக வனவிலங்கு நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விவேக் குமார். - படம்: உலக வனவிலங்கு நிதியம்

“இம்முயற்சிக்கான ஆதரவு பொதுமக்களிடையே தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், பருவநிலை மாற்றத்தை நேரடியாக உணர்ந்துள்ளதால் இவ்வாண்டு மீண்டும் புதியதாகத் தொடங்கியதுபோல இருக்கிறது,” என்றார் திரு விவேக்.

சுற்றுச்சூழல் மாசுபாடு, பருவநிலை மாற்றம், பல்லுயிர் பன்முகத்தன்மையின் பாதுகாப்பு, நீடித்த நிலைத்தன்மை ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சமூகப் பங்களிப்பை ஊக்குவிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளும் இடம்பெற்றன.

“இது மாதிரி நிகழ்ச்சிதான். இதேபோல ஆண்டு முழுவதும் முன்னெடுப்புகள் நடைபெறுகின்றன. அவற்றில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார் உலக வனவிலங்கு நிதியத்தின் கல்வி நடவடிக்கைப் பிரிவுத் தலைவர் ஜெய‌ஸ்ரீ.

“ சுற்றுப்புறம் குறித்த ஆர்வம் கொண்ட அனைவருக்கும் அதுகுறித்த புரிதல் ஏற்படுத்தும் வகையிலான திட்டங்களையும் அமைப்பு நடத்தி வருகிறது. ‘சிட்டிசன் சயின்ஸ்’ எனும் இத்திட்டம் ஆண்டு முழுவதும் நடைபெறுகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

பெரியவர்களைவிடச் சிறாருக்கு விலங்குகள், இயற்கை மீதான ஆர்வம் அதிகம் இருக்கும் என்றும் அவர்களுக்கு எதையும் பழக்குவது எளிதென்றும் சொன்னார் ஜெய‌ஸ்ரீ. இயற்கையுடன் இணைந்து வாழ அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“இயற்கைக்கும் பூமிக்கும் திரும்பச் செலுத்துவதை ஒரு கடமையாகக் கருதாமல் விருப்பத்தோடு செய்ய வேண்டும். நமது நேரத்தை இயற்கையுடன் செலவிடத் தொடங்கினாலே அதன்மீது ஆர்வம் அதிகரிக்கும்,” என்று குறிப்பிட்டார் திரு விவேக்.

நிகழ்ச்சியில் பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கப் பலவகையான கலை நடவடிக்கைகள் இடம்பெற்றன. சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழக (SIFAS) மாணவர்கள், பங்கேற்பாளர்களுக்கு அச்சுக்கலை (Block Print) வடிவமைப்பைக் கற்றுத்தந்தனர்.

சிஃபாஸ் மாணவியான திருவாட்டி மீனாம்பிகை, 58, பயிற்றுநர் ரகுவீரன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பங்கேற்றது மகிழ்ச்சியளித்ததாகக் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்