‘ஈஸ்ட் ஏசியா ஃபோரம்’ இணையத் தளத்திற்கு ‘பொஃப்மா’ உத்தரவு

1 mins read
dff7fc07-1b57-45f3-aa18-882be4fac47c
லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவின் சுதந்திரம் குறித்தும் பிரதமர் லீ சியன் லூங் சில விவகாரங்களைக் கையாண்ட விதம் குறித்தும் சில பொய்யான தகவல்களை ஈஸ்ட் ஏசியா ஃபோரம் வெளியிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. - கோப்பு படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இணையவழிக் கல்வி கற்பிக்கும் தளமான “ஈஸ்ட் ஏசியா ஃபோரம்” என்னும் இணையத் தளத்திற்குச் சிங்கப்பூர் இணையவழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்கீழ்(பொஃப்மா) திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த இணையத்தளம் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி “சிங்கப்பூரில் நிகழும் முறைகேடுகள்” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டது.

அதில் லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவின் சுதந்திரம் குறித்தும் பிரதமர் லீ சியன் லூங் சில விவகாரங்களைக் கையாண்ட விதம் குறித்தும் சில பொய்யான தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

அந்தக் கட்டுரையின் தொடர்பில் ‘பொஃப்மா’ திருத்த உத்தரவு பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா உத்தரவின் பேரில் பிறப்பிக்கப்பட்டது என அறிக்கை தெரிவித்தது.

அந்தக் கட்டுரையைச் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் சான் யிங் கிட் எழுதியுள்ளார்.

அந்தக் கட்டுரையின் தொடக்கம், இணையத்தளத்தின் முகப்புப் பக்கம், அந்தக் கட்டுரையின் ஃபேஸ்புக் பதிவின் தொடக்கம், ஃபேஸ்புக் பக்கத்தின் முகப்புப் பக்கம் ஆகியவற்றில் “ஈஸ்ட் ஏசியா ஃபோரம்” திருத்தம் வெளியிட வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

குறிப்பிட்ட திருத்தத்தை வெளியிட்டால்தான் வாசகர்களுக்கு இரு தரப்புகளையும் படித்து ஆராய்ந்து உண்மை நிலையை அறிய முடியும் எனவும் அதில் சொல்லப்பட்டது.

குறிப்புச் சொற்கள்