தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஈஸ்ட் கோஸ்ட், தென்தீவுகளின் கடல் பகுதியில் நீந்தலாம், விளையாடலாம்

1 mins read
a766a727-3a46-4fa9-a726-5e8fe8efb644
பாதிக்கப்பட்ட கடல் பகுதியிலும் கடலோரங்களிலும் எண்ணெய் தென்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஷெல் எண்ணெய்க் கசிவு காரணமாக ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவையும் கூசு, செயின்ட் ஜான்ஸ், லாசரஸ் ஆகிய தென்தீவுகளையும் ஒட்டிய கடல் பகுதிகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.

அதனால், அந்த வட்டாரக் கடலுக்குச் சென்று நீந்தலாம், நீர் தொடர்பான பிற நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம்.

இதனை தேசிய சுற்றுப்புற வாரியம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) டெலிகிராம் செயலி வாயிலாகத் தெரிவித்தது.

அக்டோபர் 20ஆம் தேதி புலாவ் புக்கோமுக்கும் புக்கோம் கெச்சிலுக்கும் இடையிலான ஷெல் எண்ணெய்க் குழாயில் கசிவு காணப்பட்டது.

விடியற்காலை 5.30 மணிக்குத் தொடங்கிய கசிவு பிற்பகல் 3 மணியளவில் நிறுத்தப்பட்டது. இடைப்பட்ட நேரத்தில் எண்ணெய்யும் நீரும் கலந்த 30 டன்னுக்கும் மேலான கலவை, குழாயிலிருந்து கசிந்து கடலில் கலந்தது.

அதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்டோபர் 21ஆம் தேதி அந்தப் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு வாரியம் கட்டுப்பாடு விதித்தது. அது தொடர்பாக வாரியம் உள்ளிட்ட ஒன்பது அரசாங்க அமைப்புகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன.

மற்றொரு முன்னெச்சரிக்கை ஏற்பாடாக, செந்தோசா, வெஸ்ட் கோஸ்ட் பூங்கா, ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா ஆகியவற்றின் கடலோரங்களில் உள்ள நீர்நிலைகளைச் சுற்றிலும் எண்ணெய் உறிஞ்சும் கம்பங்கள் அமைக்கப்பட்டன.

சம்பவம் நிகழ்ந்த பிறகு கடலிலும் கடலோரங்களிலும் எண்ணெய் எதுவும் தென்படவில்லை என்று வாரியம் தற்போது தெரிவித்து உள்ளது.

குறிப்புச் சொற்கள்