ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைக்கப்பட்ட பணிமனைக்கு மாறியது கிழக்கு-மேற்கு ரயில் பாதை செயல்பாடுகள்

ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைக்கப்பட்ட பணிமனைக்கு மாறியது கிழக்கு-மேற்கு ரயில் பாதை செயல்பாடுகள்

2 mins read
7688d35f-d58f-4681-8e13-b8d4ec8d2c70
ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைக்கப்பட்ட பணிமனையில் ரயிலின் அடிப்பகுதியை ஆய்வு செய்ய உயர்த்தப்பட்ட ஆறு பரிசோதனை தண்டவாளங்கள் உள்ளன - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கிழக்கு-மேற்கு ரயில் பாதை டிசம்பர் 2025ஆம் ஆண்டில் புதிய ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைக்கப்பட்ட பணிமனையுடன் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் செயல்பாடுகள் அங்கிருந்து தொடங்கப்பட்டுள்ளன.

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை மற்றும் டௌன்டவுன் பாதை ரயில்கள் 2026 இறுதிக்குள் இந்த ஒருங்கிணைக்கப்பட்ட பணிமனையிலிருந்து இயங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 10) நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

தற்போது, டௌன்டவுன் பாதை ரயில்கள் உட்லண்ட்சில் உள்ள கலி பத்து பணிமனையையும், தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை ரயில்கள் மண்டாய் பணிமனையையும் பயன்படுத்துகின்றன.

பல அடுக்குகளைக் கொண்ட இந்த ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைக்கப்பட்ட பணிமனை, 220 ரயில்கள் வரை நிறுத்திவைக்கும் வசதி கொண்டது. மூன்று வெவ்வேறு ரயில் பாதைகளுக்கான பணிமனைகள் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுள்ளன.

டௌன்டவுன் பாதை ரயில்களுக்கான பணிமனை நிலத்துக்கு அடியில் உள்ள தளத்தில் உள்ளது.

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை ரயில்களுக்கான பணிமனை தரைத்தளத்தில் உள்ளது.

கிழக்கு-மேற்குப் பாதை ரயில்களுக்கான பணிமனை நிலத்துக்கு மேல் உள்ள தளத்தில் அமைந்துள்ளது.

இவை பொதுவான வசதிகள் மற்றும் அமைப்புகளைப் பகிர்ந்துகொண்டாலும், மூன்று பணிமனைகளும் தனித்தனியாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. டௌன்டவுன் பாதையை எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் இயக்குகிறது.

ஒரே இடத்தில் மூன்று பணிமனைகளை அமைப்பதன் மூலம் 44 ஹெக்டர் நிலம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இது தோராயமாக 60 காற்பந்துத் திடல்களின் பரப்பளவுக்குச் சமமாகும்.

ஊழியர்கள், புதிய பணிமனையில் வேலை செய்வது பலவிதங்களில் எளிதாக இருப்பதாகக் கிழக்கு-மேற்கு மற்றும் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதைகளை இயக்கும் எஸ்எம்ஆர்டியின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் சாங்கி பணிமனையில், ரயில் ஓட்டுநர்கள் தண்டவாளங்களை அடைய திறந்தவெளியில் ‘பகி’ வாகனத்தில் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் புதிய பணிமனையில், அலுவலகத்திலிருந்து தண்டவாளங்களுக்குச் செல்ல கூரையிடப்பட்ட நடைபாதை வசதி உள்ளது.

சாங்கி பணிமனையில் தண்டவாள அமைப்பு காரணமாக ஒரு ரயிலை நிறுத்தி வைப்பதற்கு ஏறத்தாழ 20 நிமிடங்கள் ஆகும். ஆனால் புதிய பணிமனையில் ரயில்கள் நேரடியாக நிறுத்துமிடத்திற்குச் செல்ல முடிவதால், அதே வேலை இப்போது 10 நிமிடங்களுக்குள்ளேயே முடிந்துவிடுகிறது.

புதிய பணிமனையில் ரயில்களை நிறுத்தி வைக்கும் மற்றும் பராமரிக்கும் திறன் பல மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைக்கப்பட்ட பணிமனையில் 38 தண்டவாளங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் இரண்டு ரயில்கள் என மொத்தம் 76 ரயில்களை நிறுத்தலாம். இது சாங்கி பணிமனையில் இருந்த 36 ரயில்கள் என்ற கொள்ளளவைவிட இரண்டு மடங்கிற்கும் அதிகம்.

ரயிலின் அடிப்பகுதியை ஆய்வு செய்ய புதிய பணிமனையில் உயர்த்தப்பட்ட ஆறு பரிசோதனை தண்டவாளங்கள் உள்ளன. சாங்கி பணிமனையில் நான்கு மட்டுமே இருந்தன.

ரயில்களைப் பராமரித்த பிறகு அவற்றைச் சோதிக்கத் தனியாக ஒரு சோதனைத் தண்டவாளம் உள்ளது. சாங்கி பணிமனையில் இந்த வசதி இல்லாததால், பொறியாளர்கள் ரயில்களைச் சோதிக்க நள்ளிரவு வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

குறிப்புச் சொற்கள்