கிழக்கு - மேற்கு ரயில் பாதையில் ஜூரோங் ஈஸ்ட் நிலையத்திற்கும் புவன விஸ்தா நிலையத்திற்கும் இடையே செப்டம்பர் மாதம் 25ஆம் தேதியிலிருந்து 30ஆம் தேதி வரை சேவை தடைபட்டதால் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 500,000 பயணங்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளும் ரயில் பயணங்களில் கிட்டத்தட்ட ஆறில்-ஒரு பயணத்துக்கு இது சமம்.
சிங்கப்பூரின் எம்ஆர்டி கட்டமைப்பின் 37 ஆண்டுகால வரலாற்றில் ஏற்பட்ட ஆக மோசமான பாதிப்பாகக் கருதப்படும் சேவைத் தடை குறித்து 18க்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் அமைச்சர்நிலை அறிக்கை மூலம் பதில் அளித்தார்.
நாடாளுமன்றத்தில் அக்டோபர் 15ஆம் தேதி அவர் அந்த அறிக்கையை வெளியிட்டார்.
அந்த சேவைத் தடை குறித்து அமைச்சர் மீண்டும் ஒருமுறை மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
விசாரணையில் தவறுகள் ஏதும் கண்டறியப்பட்டால் நிலப் போக்குவரத்து ஆணையம் அபராதம் விதிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
விசாரணையின் முடிவு என்னவாக இருந்தாலும் சேவைத் தடை தொடர்பான செலவுகளுக்கு எஸ்எம்ஆர்டி நிறுவனம் பொறுப்பேற்கும் என்றார் அமைச்சர்.
சம்பவம் தொடர்பான சில விவரங்களை விசாரணை நிறைவடைந்த பிறகே நிர்ணயிக்கமுடியும் என்றார் திரு சீ.
தொடர்புடைய செய்திகள்
அச்சாணிப் பெட்டி கழன்று விழுந்ததற்கான காரணம் உட்பட மூல காரணத்தைக் கண்டறியும் அதேவேளையில் நமது பதில் நடவடிக்கையை மேம்படுத்தும் விதம், வருங்காலத்தில் இத்தகைய சம்பவங்களைத் தடுக்கும் விதம் போன்ற கற்றல் அம்சங்களிலும் விசாரணை கவனம் செலுத்தும் என்றார் அவர்.
பாதுகாப்பு, நம்பகத்தன்மை, எம்ஆர்டி கட்டமைப்பின் மீள்திறன் போன்றவை நமது முன்னுரிமைகள் என்று குறிப்பிட்ட அமைச்சர், இந்தச் சம்பவம் மேலும் சிறப்பாகச் சேவை வழங்கவேண்டும் என்ற பொதுப் போக்குவரத்துத் துறையின் உறுதியைக் குலைக்காது என்றார்.
நம்பகத்தன்மை குறித்துக் குறிப்பிட்ட அமைச்சர், ஆணையமும் நிறுவனமும் இச்சம்பவத்தைத் தீவிரமாகக் கருதுவதாகச் சொன்னார்.

