தண்டவாளப் பழுது, மோசமான வானிலை ஆகியவற்றின் காரணமாக ஏப்ரல் 4ஆம் தேதி கிழக்கு-மேற்குப் பாதையில் ஒன்பது நிலையங்களைக் கொண்ட ரயில் சேவை சுமார் மூன்று மணி நேரம் தாமதமானது.
ஜூரோங் ஈஸ்ட், கிளமெண்டி நிலையங்களுக்கு இடையில் மேற்கு நோக்கிச் செல்லும் திசையில் பிற்பகல் 1.10 மணியளவில் தண்டவாளக் கோளாறு ஏற்பட்டது. குவீன்ஸ்டவுன், பூன் லே நிலையங்களுக்கு இடையில் பயணிக்கும்போது 20 நிமிடங்கள் கூடுதலாகக் கணக்கிடுமாறு பயணிகளுக்கு எஸ்எம்ஆர்டி நிறுவனம் முதலில் மதியம் 1.30 மணியளவில் அறிவுறுத்தியது.
ஜூரோங் ஈஸ்ட் மற்றும் லேக்சைட் நிலையங்களுக்கு இடையே இணைப்பு ரயில் சேவைகள் உள்ளன. புவன விஸ்தா, பூன் லே நிலையங்களுக்கு இடையே வழக்கமான இலவச இணைப்புப் பேருந்து வசதியும் இருந்தது.
வழக்கமான ரயில் சேவை மீண்டும் தொடங்கியதாக, எக்ஸ் தளத்தில் மாலை 4.08 மணிக்கு எஸ்எம்ஆர்டி தெரிவித்தது.
மோசமான வானிலை, மின்னல் அபாயம் ஆகியவை காரணமாக பழுதை முன்னதாகவே சரி செய்ய முடியாமல் போனதால், எஸ்எம்ஆர்டி தனது பொறியியல் குழு சம்பவ இடத்திற்கு வந்து சிக்கலைச் சரிசெய்ய முயற்சிப்பதாகக் கூறியது.
புவன விஸ்தா, பூன் லே நிலையங்களுக்கு இடையில் பயணம் செய்பவர்கள் புவன விஸ்தாவில் உள்ள வட்டரயில் பாதையில் மாறவும். பயணிகள் வடக்கு-தெற்கு பாதையைப் பயன்படுத்தி உட்லண்ட்சில் உள்ள தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதைக்கு மாறி நகரத்திற்குச் செல்லலாம் என்றும் எஸ்எம்ஆர்டி அறிவுறுத்தியது.