எஸ்எம்ஆர்டி நிறுவனம் கிழக்கு-மேற்குத் தடத்தில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த ஆறு நாள் சேவைத் தடங்கலுக்காக $2.4 மில்லியன் அபராதம் செலுத்த வேண்டும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
சேவைத் தடங்கல் குறித்த விசாரணை முடிவுகள் வெளிவந்த பிறகு, ஜூன் மாதம் ஆணையம் விதிக்க எண்ணியிருந்த $3 மில்லியன் அபராதத் தொகையைவிட அது குறைவு.
ஆணையம் அதுகுறித்த அண்மைத் தகவலை வெள்ளிக்கிழமை (ஜூலை 25) வெளியிட்டது. $2.4 மில்லியன் அபராதத் தொகை பொதுப் போக்குவரத்து நிதியில் சேர்த்துக்கொள்ளப்படும் என்று அது குறிப்பிட்டது.
எஸ்எம்ஆர்டி அதன் ஆற்றல்களை வலுப்படுத்தக் குறைந்தது $600,000 முதலீடு செய்ய வேண்டும் என்று ஆணையம் சொன்னது. ரயில் சேவையின் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் வழிகளை அது ஆராய வேண்டும் என்றும் ஆணையம் வலியுறுத்தியது.
கொவிட்-19 பெருந்தொற்றால் உலக அளவில் விநியோக நடவடிக்கைகளில் இடையூறுகள் ஏற்பட்டன. அதனால் ரயில்களைப் பழுதுபார்க்கத் தேவையான பாகங்களை வாங்குவதில் எஸ்எம்ஆர்டி சிரமங்களை எதிர்நோக்கியது. அபராதத் தொகையை முடிவுசெய்யும்போது அதனையும் கருத்தில்கொண்டதாக ஆணையம் குறிப்பிட்டது.
எஸ்எம்ஆர்டி ட்ரெயின்ஸ் பிரிவின் தலைவர் லாம் ஷியாவ் காய், ரயில்களையும் அதன் கட்டமைப்புகளையும் உருவாக்கிய நிறுவனங்களுடன் நேரடித் தொடர்பை வலுப்படுத்தப்போவதாகத் தெரிவித்தார். ஆணையத்தின் அறிக்கையைத் தொடர்ந்து அவர் ஃபேஸ்புக்கில் அந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
ஆற்றலைப் பெருக்க $600,000 முதலிட வேண்டும் என்ற ஆணையத்தின் உத்தரவு குறித்தும் திரு. லாம் கருத்துரைத்தார். ஊழியர்களின் திறன்களை மெருகேற்றுவதற்கு எஸ்எம்ஆர்டி நெடுங்காலமாகவே முன்னுரிமை அளித்து வருவதாக அவர் சொன்னார்.
சென்ற ஆண்டு செப்டம்பரில் ஜூரோங் ஈஸ்ட், புவன விஸ்தா நிலையங்களுக்கு இடையே ரயில் சேவைகள் தடைபட்டன. அன்றாடம் ஆறில் ஒரு சேவை பாதிக்கப்பட்டது. சேவைத் தடங்கல் உண்டானதற்கான சூழலுக்கு ஏற்பவே அபராதத் தொகை நிர்ணயிக்கப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.