கிழக்கு - மேற்குப் பாதையில் ரயில் சேவை அக்டோபர் 1ஆம் தேதி வழக்கநிலைக்குத் திரும்புமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூரோங் ஈஸ்ட் நிலையத்துக்கும் புவன விஸ்தா நிலையத்துக்கும் இடையிலான ரயில் சேவை தடைபட்டு ஆறு நாள்கள் கழித்து, சேவை வழக்கநிலைக்குத் திரும்பவிருக்கிறது.
நிலப் போக்குவரத்து ஆணையமும் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் திங்கட்கிழமை (செப்டம்பர் 30) மாலை இதைத் தெரிவித்தன.
பாதுகாப்புக் காரணங்களுக்காக, மேற்கு நோக்கிச் செல்லும் ரயில்கள் பழுதுபார்க்கப்பட்ட தடத்தின்மேல் மெதுவாகச் செல்லுமெனக் கூறப்பட்டது.
ரயிலின் வேகம் தற்காலிகமாக மணிக்கு 40 கிலோமீட்டர் என்ற அளவிற்குக் குறைக்கப்படும். வழக்கமாக மணிக்கு 60 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் இந்த ரயில்கள் செல்லும்.
அக்டோபர் 3ஆம் தேதி வரை இந்த வேகக் கட்டுப்பாடு நடப்பிலிருக்கும்.
கிழக்கு - மேற்குப் பாதையில் மேற்கு நோக்கிச் செல்லும் பயணிகள் பயண நேரம் ஐந்து நிமிடங்கள் கூடுலாம் என்பதைக் கருத்தில்கொள்ளும்படி ஆணையமும் நிறுவனமும் ஆலோசனை கூறியுள்ளன.
புதிதாக 12 விரிசல்கள் கண்டுபிடிக்கப்பட்ட பத்துத் தண்டவாளப் பகுதிகள் மாற்றப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
பயணிகளின் பாதுகாப்பை முன்னிட்டு ரயில் தடத்திலும் அதையொட்டி அமைக்கப்பட்டுள்ள கருவிகளிலும் விரிவான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
ரயில் பாதையின் செயல்பாடு, பாதுகாப்புச் சோதனைகளுடன் மின்விநியோகம், சமிக்ஞைக் கட்டமைப்பு ஆகியவையும் சோதிக்கப்பட்டன.
பயணிகள் நிறைந்திருப்பதுபோல் பாவனையாக மணல் மூட்டைகளை ரயிலில் நிரப்பிச் சோதிக்கப்பட்டது.
திங்கட்கிழமை காலை, ரயில் பாதையில் 2.55 கிலோமீட்டர் நீளத்திற்கு பாதிக்கப்பட்ட தண்டவாளப் பகுதிகள் அனைத்தும் மாற்றப்பட்டுவிட்டதாக ஆணையம் தெரிவித்தது.
மேலும், ரயில்களுக்கு மின்சாரம் வழங்கும் மூன்றாவது தண்டவாளமும் சீர்செய்யப்பட்டுவிட்டது.
முன்னதாக, செப்டம்பர் 30ஆம் தேதி ரயில் சேவையை முழுவதுமாக வழக்க நிலைக்கு மீட்க எஸ்எம்ஆர்டி நிறுவனம் இலக்கு கொண்டிருந்தது. ஆனால், புதிதாக விரிசல்கள் கண்டறியப்பட்டதை அடுத்து செப்டம்பர் 28ஆம் தேதி, அது மேலும் தள்ளிப்போடப்பட்டது.
கிளமெண்டி நிலையம் முதல் உலு பாண்டான் பணிமனை வரையிலான மேற்கு நோக்கிச் செல்லும் தடத்தில் 10 இடங்களில் தண்டவாளப் பகுதிகள் மாற்றப்பட்டுள்ளன.
இவ்வேளையில் அக்டோபர் 1ஆம் தேதி ரயில் சேவை வழக்கநிலைக்குத் திரும்புவது குறித்துப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் ஃபேஸ்புக்கில் காணொளி ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
இதன் தொடர்பில் அர்ப்பணிப்போடு, கடினமாக உழைத்த அனைவருக்கும் ஆதரவு நல்கியோருக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார். பயணிகளின் புரிதலுக்கும் பொறுமைக்கும் அவர் நன்றி கூறினார்.
செப்டம்பர் 25ஆம் தேதி காலை 9 மணியளவில் பழுதான 35 ஆண்டுப் பழைமையான ரயில், உலு பாண்டான் பணிமனைக்குத் திருப்பிவிடப்பட்டது.
வழியில் அதன் அச்சாணிப்பெட்டி (Axle box) கழன்று விழுந்ததால் தண்டவாளமும் அதை ஒட்டியிருந்த கருவிகளும் சேதமடைந்தன. பின்னர் ரயில் சேவை தடைபட்டது.

