சிங்கப்பூரின் சாதனையை சுலபமாகக் கருதுவது எளிது. ஆனால், அதில் அடிக்கடி சிரமங்களையும் பிரச்சினைகளையும் சமாளிக்க வேண்டி உள்ளது என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்து உள்ளார்.
வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியைக் கண்டறிவதும் அதில் ஒன்று என்றார் அவர்.
“ஐந்தாண்டு காலம் நிதி அமைச்சராக இருந்தேன். அப்போது நிறைய திட்டங்களைச் செயல்படுத்த விரும்பினோம். ஆனால், நிதி போதுமானதாக இருக்காது என்பதே தொடர் சவாலாக இருந்தது.
“இருப்பினும் நாம் அனைவரும் நமது முயற்சிகளை ஈடுபடுத்தி, வருங்காலத்திற்காகச் சேமிக்கலாம். நாம் விரும்புவதையும் நமக்குத் தேவையானதையும் அடைவது மட்டுமன்றி, ஆழமான தோழமைப் பிணைப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவோம்,” என்றார் திரு ஹெங்.
சுதந்திரம் பெற்றது முதல் கவனமான, நீண்டகாலத் திட்டமிடலுடன் பல்வேறு திட்டங்கள் செய்து முடிக்கப்படுகிறது என்றார் அவர்.
சீனப் புத்தாண்டை முன்னிட்டு ஹார்ட்பீட்@பிடோக்கில் சனிக்கிழமை (ஜனரி 25) நடைபெற்ற கண்காட்சி தொடக்க நிகழ்வில் பங்கேற்றுப் பேசுகையில் அவர் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் அங்கம் வகிக்கும் எம்.பி.க்களும் அடித்தள அமைப்புகளின் தொண்டூழியர்களும் குடியிருப்பாளர்களும் அண்மைய ஆண்டுகளாக சாதித்த செயல்கள் அந்தக் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தன.