தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உணவுக் கொடையை தாராளமாக அனுமதிக்க புதிய சட்டம்

2 mins read
2b9a2310-4359-42f3-895d-5c594cc602ae
குறைந்த வருமானம் ஈட்டுவோர், வசதியற்ற முதியோர் போன்ற தேவை உள்ளோருக்கு உணவை கொடையாக வழங்குவதன் மூலம் உணவு விரயத்தைத் தடுப்பது புதிய சட்டத்தின் நோக்கம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உணவகங்களும் அறநிறுவனங்களும் விற்காத, பயன்படுத்தாத உணவை தாராளமாக பிறருக்குக் கொடையாக அளிக்கும் காலம் வர இருக்கிறது.

சுத்தத்தையும் பாதுகாப்பையும் கடுமையாகக் கடைப்பிடிக்கும்வரை உணவுப் பாதுகாப்புத் தொடர்பான விதிமுறைகள் அவர்களுக்கு ஒரு தடையாக இருக்காது.

புதிய சட்டம் நடப்புக்கு வந்ததும் உணவுக் கொடையில் அவர்கள் ஈடுபடலாம்.

அதற்கு வழிவிடும் வகையில், ‘இரக்க சிந்தை பண்பாளர் உணவு நன்கொடை மசோதா’ புதன்கிழமை (ஆகஸ்ட் 7) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதற்கு 15க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்த ஆதரவு தெரிவித்தனர். பாட்டாளிக் கட்சி, சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்களும் அவர்களுள் அடங்குவர்.

உணவுக் கொடையாளர்களை உணவு நச்சுச் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்பதில் இருந்து பாதுகாக்கும் குறிக்கோள் கொண்டது புதிய சட்டம்.

அதே சமயம், குறைந்த வருமானம் ஈட்டுவோர், வசதியற்ற முதியோர் போன்ற தேவை உள்ளோருக்கு உணவை கொடையாக வழங்குவதன் மூலம் உணவு விரயத்தையும் அந்தச் சட்டம் தடுக்கும்.

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு விரயமான மொத்த பொருள்களில் உணவுப் பொருள்களின் விகிதம் ஏறக்குறைய 11 விழுக்காடு.

நாடாளுமன்றத்தில், அரசியல் பதவி வகிக்காத நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைக்கும் தனிப்பட்டோர் மசோதாவை நீ சூன் குழுத்தொகுதி உறுப்பினர் லூயிஸ் இங் தாக்கல் செய்தார்.

அந்த மசோதா முக்கியமான நான்கு நிபந்தனைகளை உள்ளடக்கி உள்ளது.

உணவு வர்த்தகங்களும் அறநிறுவனங்களும் சட்டப் பாதுகாப்பைப் பெறுமுன்னர் அந்த நிபந்தனைகளை அவை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

உணவு வர்த்தகர் அல்லது உணவு விநியோகிப்பாளரிடம் இருந்து கொடைக்காகக் கொண்டு செல்லப்படும் உணவு பாதுகாப்பானதாகவும் சாப்பிடக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

உணவுப் பாதுகாப்பை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்று உணவைப் பெறுபவர்களுக்கு கொடையாளர்கள் சொல்லித்தர வேண்டும்.

உதாரணத்திற்கு, குளிர்சாதனப் பெட்டியில் உணவைப் பாதுகாப்பது பற்றியும் சூடாக வைத்திருப்பது பற்றியும் அவர்களுக்குத் தகவல் அளிக்க வேண்டும்.

சட்டத்துக்குட்பட்ட முறையில் சுத்தத்துடனும் சுகாதாரமாகவும் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொள்ள வேண்டிய கால அவகாசத்தையும் ஆவணங்களில் குறிப்பிட வேண்டும்.

குறிப்புச் சொற்கள்