எக்சிகியூட்டிவ் கொண்டோமினிய (இசி) வீடுகளை வாங்குவதற்காக நிர்ணயிக்கப்பட்ட வருமான உச்ச வரம்பிலிருந்து தங்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி விண்ணப்பித்தவர்களில் மூவரில் ஒருவருக்கு அனுமதி வழங்கப்பட்டது என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) தெரிவித்தது.
இது, கடந்த ஐந்து ஆண்டுகளில், அதாவது 2020 முதல் 2025 வரையில் சமர்பிக்கப்பட்ட 2,583 விண்ணப்பங்களில் 845 ஏற்றுக் கொள்ளப்பட்டதாக வீவக கூறியது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேடு, கடந்த ஏப்ரல் மாதம் எழுப்பிய கேள்விக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 10) வீவக இவ்வாறு விளக்கமளித்தது.
தற்போது இசி வாங்க விரும்பும் குடும்பத்தின் மாதாந்தர வருமான வரம்பு $16,000ஆக உள்ளது.
முன்னதாக, கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹோங் டாட், வருமான வரம்பைத் தளர்த்தக் கோரி இசி வீடு வாங்க விரும்பியவர்களிடமிருந்து வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை, 2024ல் 461ஆக இருந்த நிலையில் 2025ல் 1,147ஆக இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்ததாகத் தெரிவித்தார்.
இதற்கு முன், இத்தகைய மேல்முறையீடுகள் 2022ல் 496லிருந்து 2023ல் 237ஆகப் பாதியாகக் குறைந்தன.
இசி, பிடிஓ (தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகள்) வீட்டு விண்ணப்பதாரர்களின் வருமான வரம்பு மீறல் குறித்து பாட்டாளிக் கட்சியின் தலைவர் பிரித்தம் சிங் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் சீ ஹாங் டாட் நாடாளுமன்றத்தில் பதிலளித்தார்.
தற்போது பிடிஓ வீடு வாங்க விரும்பும் குடும்பங்களுக்கு வருமான உச்ச வரம்பு $14,000 ஆகவும் தனிநபர்களுக்கு $7,000ஆகவும் உள்ளது.
இந்த வருமான உச்ச வரம்பை தேசிய வளர்ச்சி அமைச்சும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் மறுபரிசீலனை செய்து வருகின்றன.
மருத்துவச் சிகிச்சைக்கான பெரும் சுமை, நீண்டகாலச் செலவுகள், குடும்பச் சூழ்நிலைகள் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு விண்ணப்பமும் பரிசீலிக்கப்படுவதாக வீவக தெரிவித்தது.
இதற்கிடையில், இசி வீடுகள் கட்டுப்படியான விலையில் இல்லை என்ற கவலை காரணமாக கடந்த மே மாதம் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.
இவை, மே 8ஆம் தேதியிலிருந்து முடிவடையும் இசி திட்டங்களுக்கான அரசாங்க நில விற்பனை ஒப்பந்தக் குத்தகைகளுக்குப் பொருந்தும்.
இசி வீடுகள், முதலீடுகளுக்காக வாங்கப்படுவதைத் தடுத்து உரிமையாளர்கள் அந்த வீட்டில் தங்குவதை உறுதி செய்வதற்காக குறைந்தபட்ச தங்கும் காலம் 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
இனிமேல் இசி வாங்குபவர்கள் செலுத்த வேண்டிய பணத்தை ஒத்தி வைத்து பின்னர் வழங்கும் திட்டத்தையும் விநியோகிப்பாளர்கள் வழங்க முடியாது. இத்திட்டத்தின்கீழ் முன்பணமாக 20 விழுக்காடு மட்டும் செலுத்திவிட்டு எஞ்சிய 80 விழுக்காட்டுப் பணத்தை கட்டி முடித்த பிறகு செலுத்த முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், மே 8 முதல் கட்டுமானம் ஒவ்வொரு கட்டமாக முடியும்போது படிப்படியாகப் பணத்தை செலுத்தும் முறை இசி வாங்குபவர்களுக்கு இருக்கும்.

