பொருளியல் நிலவரத்தையும் சிங்கப்பூரர்கள்மீது அது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையும் கையாள்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
சிங்கப்பூரின் எதிர்காலத்தை வலுப்படுத்துவதற்குப் புதிய, வலுவான குழுவை உருவாக்குவதிலும் தாம் கவனம் செலுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மே 9ஆம் தேதி சமூக ஊடகத்தில் பதிவேற்றிய காணொளியில் பேசிய பிரதமர் வோங், “நாட்டை முன்னெடுத்துச் செல்ல அனுபவத்தையும் புதிய கண்ணோட்டத்தையும் கொண்ட குழுவையே சிங்கப்பூரர்கள் விரும்புகின்றனர் என்பதைத் தேர்தல் முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன,” என்றார்.
அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் செயல் கட்சி 65.57% வாக்குகளுடன் வெற்றிபெற்ற நிலையில், அதற்கு ஆறு நாள்களுக்குப்பின் பிரதமர் வோங்கின் அறிக்கை வெளியாகியுள்ளது.
மக்கள் செயல் கட்சி 97 நாடாளுமன்ற இடங்களில் 87 இடங்களைக் கைப்பற்றியது.
அனைத்துலக வர்த்தகத்தில் நிலவும் கொந்தளிப்பான சூழலுக்கும் உலகளவில் நிலவும் முக்கியப் பிரச்சினைகளுக்கும் இடையே மசெகவிற்குத் தேர்தலில் வெற்றி கிட்டியுள்ளது.
இவ்வாண்டு ஏப்ரலில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இறக்குமதி வரிகளைக் கடுமையாக உயர்த்தியது உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்படி, சிங்கப்பூர் இறக்குமதிகளுக்கு 10% வரி விதிக்கப்பட்டது.
அமெரிக்கா விதித்த வரிகளால் சிங்கப்பூரில் உள்ள ஐந்தில் நான்கு வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் அண்மை ஆய்வு காட்டுவதாகப் பிரதமர் வோங் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
நான்கில் மூன்று நிறுவனங்கள் அவற்றின் வருமானம் குறைந்திருப்பதாகவும் அவற்றில் பாதி அடுத்த மூன்று மாதங்களுக்கு புதிய ஊழியர்களை வேலைக்கு எடுக்காமல் நிறுத்திவைத்திருப்பதாகவும் தெரிவித்தன.
“எனவே வர்த்தகங்கள் மிகவும் கவலையடைந்திருக்கின்றன,” என்றார் திரு வோங்.
ஊழியர்களும் தொழிற்சங்கத் தலைவர்களும்கூட பதற்றத்தில் உள்ளனர். கல்வியை முடிக்கும் மாணவர்களும் வேலை வாய்ப்பு குறித்து கவலையில் உள்ளனர்.
இதனால்தான் துணைப் பிரதமர் கான் கிம் யோங் தலைமையிலான சிங்கப்பூர்ப் பொருளியல் மீள்திறன் பணிக்குழு மும்முரமாக புதிய திட்டங்களை வகுக்க ஒன்றுகூடுகிறது.
கூடுதல் விவரங்கள் தயாராகும்போது வெளியிடப்படும் என்று பிரதமர் வோங் கூறியுள்ளார்.
சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்காகவும் சிறந்ததைச் செய்வோம் என்றும் அவர் உறுதிகூறினார்.

