தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பல்வேறு துறைகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு: அமைச்சர் சீ ஹொங் டாட்

3 mins read
11dc1004-0874-46cf-a837-438df6be4edb
சிலேத்தார் விண்வெளித் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள ஏர்பஸ் சிங்கப்பூர் வளாகத்திற்கு புதன்கிழமை (மே 7) போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் வருகை புரிந்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

இன்றைய நிச்சயமற்ற உலகச் சூழலில் நம்பகத்தன்மைக்கே அதிக மதிப்பு உள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் ஏற்கெனவே ஒரு நம்பிக்கைக்குரிய நாடாக செயல்பட்டுவருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், நமது பலங்களைப் பயன்படுத்தி விமானத்துறையை மட்டுமல்லாது பலதரப்பட்ட துறைகளையும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதைத் தாம் ஆராய விரும்புவதாகக் கூறினார்.

“தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீயும் நானும், பொருளியல் மீள்திறன் பணிக்குழுவுடன் இணைந்து இதன் தொடர்பாகப் பணித்திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்,” என்றார் திரு சீ.

சிங்கப்பூரை ஒரு முன்னணி விமான மையமாக உறுதிப்படுத்தும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, புதன்கிழமை (மே 7) சிலேத்தார் விண்வெளித் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள ஏர்பஸ் சிங்கப்பூர் வளாகத்திற்கு அமைச்சர் சீ வருகைபுரிந்தார்.

பொருளியல் வளர்ச்சிக்கு ஆதரவளித்தல், அனைத்துலக இணைப்புகளை விரிவாக்குதல், தொழில்துறை முழுவதும் தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் முதலியவற்றின் மூலம் விமானத்துறையை வலுப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதை எடுத்துக்காட்டும் வண்ணம் அவரது வருகை அமைந்திருந்தது.

ஏர்பஸ் சிங்கப்பூர் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் விமான போக்குவரத்துத் துறையின் எதிர்காலம் குறித்த இலக்குகளை விளக்கினார்.

ஏர்பஸ் சிங்கப்பூர் வளாகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் சீ பேசினார்.
ஏர்பஸ் சிங்கப்பூர் வளாகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் சீ பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அடுத்த பத்து ஆண்டுகளில், புதிய ஒத்துழைப்புகளையும் வாய்ப்புகளையும் எவ்வாறு உருவாக்கலாம் என்பதை நாம் கவனிக்க வேண்டும் என்ற அமைச்சர் சீ, தற்போது மனிதவளம் குறித்த ஆய்வு நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

“அது தயாரானவுடன் கூடுதல் விவரங்களை வெளியிடுவோம்,” என்றும் அவர் சொன்னார்.

தொழில்நுட்பத்தின் பயன்பாடு, தானியங்கி முறைகள் எவ்வாறு உதவும், மின்னிலக்கச் செயல்பாட்டு முறைகளுக்கு மாறுவது முதலியவை தொழிலாளர்களின் உற்பத்தித்திறனையும் பணிமுறைகளின் திறனையும் அதிகரிக்கும் என்றார் திரு சீ.

“இதற்காக, பணிகளை மறுவடிவமைப்பு செய்ய வேண்டியிருக்கும். நமது ஊழியர்களின் வயது அதிகரித்து வருவதால், மூத்த ஊழியர்கள் தங்கள் அனுபவத்தைப் பயன்படுத்தி விமானத்துறைக்கு தொடர்ந்து பங்களிக்கும் வகையில், உடல்சார்ந்த பணிகளைக் குறைக்கும் வகையில் வடிவமைக்க விரும்புகிறோம்,” என்று அமைச்சர் விளக்கினார்.

அடுத்த வாரம் சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவிருக்கிறது.

அது குறித்துப் பேசிய திரு சீ, “புதிய செயல்பாட்டு முறைகள், நவீன தொழில்நுட்பங்கள், வடிவமைப்புத் திட்டங்கள் முதலியவற்றை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பை நமக்கு இந்தப் புதிய முனையம் வழங்குகிறது. மேலும், நமது விமான நடுவத்தை எவ்வாறு மேலும் நிலைத்தன்மை வாய்ந்ததாக மாற்றலாம் என்பதை ஆராய்வதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாகும்,” என்றார்.

புதிய முனையத்தின் திறப்பும் சரக்கு விமானத் துறையின் வளர்ச்சியும் மேலும் பணி வாய்ப்புகளை உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், இளையர்களை அத்துறையில் சேர ஊக்குவிக்க விரும்புவதாகவும் சொன்னார்.

ஏர்பஸ் ஆசிய பயிற்சி நிலையம், ஸ்கைவைஸ் அனுபவ நிலையம் (Skywise Experience Centre) உள்ளிட்ட வளாகத்தின் முக்கிய வசதிகளை அவர் பார்வையிட்டார். மேலும், புதிதாகக் காட்சிக்கு வைக்‌கப்பட்டுள்ள பிஒ105 ஹெலிகாப்டரின் அறிமுக விழாவிலும் அவர் கலந்துகொண்டார்.

ஏர்பஸ் ஆசிய பயிற்சி நிலையத்தில் புதிதாகக் காட்சிக்கு வைக்‌கப்பட்டுள்ள பிஒ105 ஹெலிகாப்டரின் அறிமுக விழாவில் அமைச்சர் சீ பங்கேற்றார்.
ஏர்பஸ் ஆசிய பயிற்சி நிலையத்தில் புதிதாகக் காட்சிக்கு வைக்‌கப்பட்டுள்ள பிஒ105 ஹெலிகாப்டரின் அறிமுக விழாவில் அமைச்சர் சீ பங்கேற்றார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஐரோப்­பாவைச் சேர்ந்த ஏர்பஸ் நிறுவனம் 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிங்கப்பூரில் செயல்­பட்டு வரு­கிறது. அதன் சிங்கப்பூர் வளாகம், வர்த்தக விமானங்களுக்கும் பாதுகாப்பு, விண்வெளி, ஹெலிகாப்டர் செயல்பாடுகளுக்குமான ஒரு வட்டார மையமாகும். அங்கு ஏறக்­கு­றைய 750 பேர் வேலை பார்க்­கிறார்­கள்.

விமான நிறுவனங்கள் தங்கள் விமானக் கூட்டுத்திறனையும் செயல்பாட்டையும் மேம்படுத்த உதவும் தரவுசார்ந்த தீர்வுகள் குறித்து ஸ்கைவைஸ் அனுபவ நிலையம் ஆராய்ந்து வருகிறது.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த விமானக் கருவிகள், ‘ஆஃப்லைன்’ காணொளிப் பகுப்பாய்வு, பயணிகளின் எடையையும் பயணப்பெட்டிகளின் எடையையும் கணக்கிடும் தொழில்நுட்பங்கள், பயிற்சி மேம்பாட்டிற்கான மருத்துவ மன அழுத்தக் கண்காணிப்பு முறைகள் ஆகியவை அவற்றில் அடங்கும்.

காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பிஒ105 ஹெலிகாப்டர் ஜெர்மானிய ராணுவத்தால் இயக்கப்பட்டதையடுத்து, ஏர்பஸ் ஹெலிகாப்டர்ஸ் தென்கிழக்காசியா நிறுவனத்தால் தொழில்நுட்ப பயிற்சிக்காகப் பயன்படுத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்