பொருளியல் உத்தி மறுஆய்வு (இஎஸ்ஆர்) இறுதி அறிக்கை புதன்கிழமை (ஜூன் 24) வெளியிடப்பட்டது.
கடந்த மே மாதம் 13ஆம் தேதி வெளியிடப்பட்ட 32 பரிந்துரைகளின் மேல்விவரங்கள் இந்த இறுதி அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு வெளிநாட்டு ஊழியர்களை ஈர்க்க உதவுவது, தற்போதைய சம்பள உச்சவரம்புக்கும் அதிக சம்பளத்தை ஈட்டும் ஊழியர்களுக்கும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வேலை தேடுவோர் ஆதரவுத் திட்டத்தை (SkillsFuture Jobseeker Support Scheme) நீட்டிப்பது போன்றவை பரிந்துரைகளில் அடங்கும்.
அந்தப் பரிந்துரைகளை செயல்களாக உருவெடுக்கச் செய்யும் நோக்கில் அரசாங்கம் அவற்றை ஆராய்ந்து தொழில்துறைப் பங்காளிகளுடனும் ஊழியரணிகளுடனும் சேர்ந்து செயல்படும் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு அறிக்கை மூலம் தெரிவித்தது.
எட்டுப் பிரிவுகள்
பெரிய அளவில் மாறியுள்ள உலகச் சூழலில் வளர்ச்சிகண்டு சிங்கப்பூரர்களுக்குத் தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தர சிங்கப்பூரின் உத்தியை இந்த அறிக்கை விவரிக்கிறது. இதில் இடம்பெற்றுள்ள 32 பரிந்துரைகள், எட்டுப் பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றில் நான்கு பிரிவுகள் பொருளியல் வளர்ச்சியில் கவனம் செலுத்துபவை. மூன்று பிரிவுகள் தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தும். ஒரு பிரிவு மீள்திறனில் கவனம் செலுத்தும்.
முதலில் ஏழு பரிந்துரைகள் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டன. அதற்குப் பின் எல்லாப் பரிந்துரைகளும் கடந்த மே மாதம் சிங்கப்பூர் வர்த்தகக் கூட்டமைப்பின் வருங்காலப் பொருளியல் மாநாட்டில் வெளியிடப்பட்டன.
மூன்று அணுகுமுறைகள்
சிங்கப்பூரின் அடுத்தகட்ட பொருளியல் வளர்ச்சி மூன்று உத்திபூர்வ அணுகுமுறைகளின்கீழ் இடம்பெறும் என்பதைப் பொருளியல் உத்தி மறுஆய்வு இறுதி அறிக்கை மறுவுறுதிப்படுத்தியது. அந்த அணுகுமுறைகளை, கவனம் செலுத்தப்படும் எட்டுப் பிரிவுகள் வழிநடத்தப்படும்.
முதலாவதாக, சிங்கப்பூர் தரத்தில் கவனம் செலுத்தும். அதன்படி, எந்த அம்சங்களில் ஆக அதிகத் தரத்தை சிங்கப்பூர் வழங்குகிறது, சிங்கப்பூருக்கென தனிச்சிறப்பு உள்ள அம்சங்கள் என்னென்ன ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, சிங்கப்பூரின் கல்விக் கழகங்கள், நிறுவனங்கள், ஊழியர்கள் ஆகிய தரப்புகள் மேலும் நீக்குப்போக்குடனும் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளக்கூடிய வகையிலும் செயல்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாவதாக, சிங்கப்பூர் ஆக்கபூர்வமாக செயல்படும் அதேவேளையில் அது மீள்திறனையும் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொருளியல் உத்தி மறுஆய்வுக் குழுக்கள் தொடங்கப்பட்டன. அவை, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 7,700க்கும் மேற்பட்டோருடன் 80க்கும் மேற்பட்ட முறை தொடர்புகொண்டிருக்கின்றன.

