தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் பொருளியல் 2025ல் 2.6%ஆக மெதுவடையும் என நிபுணர்கள் கணிப்பு

2 mins read
149821d1-8b24-45ff-90e9-103df485b6e8
சிங்கப்பூரில் பணவீக்கம் 2025ல் தொடர்ந்து குறையும் என ஆய்வில் கண்டறியப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

2025ல் சிங்கப்பூர் பொருளியல் 2.6 விழுக்காடு விரிவடையும் என தனியார் துறை பொருளியல் நிபுணர்கள் கணிக்கின்றனர்.

நிபுணத்துவ முன்னுரைப்பாளர்களிடம் காலாண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஆய்வு ஒன்றை சிங்கப்பூர் நாணய ஆணையம் புதன்கிழமை (டிசம்பர் 11) வெளியிட்டது. அதன்படி, 2024ல் நிபுணர்கள் இப்போது எதிர்பார்க்கும் 3.6 விழுக்காடு வளர்ச்சியிலிருந்து இது மெதுவடைவு.

எனினும், 2025, 2024 முன்னுரைப்புகள் இரண்டும் செப்டம்பர் ஆய்வில் பொருளியல் நிபுணர்கள் முன்னுரைத்திருந்ததைவிட அதிகமே. மொத்த உள்நாட்டுப் பொருளியல் 2025ல் 2.5 விழுக்காடும் 2024ல் 2.6 விழுக்காடும் விரிவடையும் என அவர்கள் முன்னுரைத்திருந்தனர்.

நவம்பரில் வர்த்தக, தொழில் அமைச்சு அதன் 2024 வளர்ச்சி முன்னுரைப்பைத் திருத்தி ஏறக்குறைய 3.5 விழுக்காடாக உயர்த்தியது. முன்னதாக இருந்த 2 விழுக்காடு முதல் 3 விழுக்காடு முன்னுரைப்பைவிட இது அதிகம்.

அதேவேளையில், 2025ல் பொருளியல் வளர்ச்சி 1 விழுக்காடு முதல் 3 விழுக்காடு வரை மெதுவடையும் என தான் எதிர்பார்ப்பதாக அமைச்சு சொன்னது.

சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் ஆக அண்மைய ஆய்வின்படி, 2025ன் உத்தேச வளர்ச்சி 2.5 விழுக்காட்டுக்கும் 2.9 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும். இது, அதற்கு முந்திய ஆய்வுடன் ஒத்திருக்கிறது.

ஆய்வில் பங்கெடுத்த அனைவரும் புவிசார் அரசியல் பதற்றங்களையே ஆகப்பெரிய இடராகச் சுட்டினர். ஒப்புநோக்க, செப்டம்பர் ஆய்வில் இந்த விகிதம் 66.7 விழுக்காடாக இருந்தது.

சிங்கப்பூரில் பணவீக்கம் 2025ல் தொடர்ந்து குறையும் என ஆய்வில் கண்டறியப்பட்டது.

2024ல் 2.5 விழுக்காடாக உள்ள ஒட்டுமொத்த பணவீக்கம் 2025ல் 1.9 விழுக்காடாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் போக்குவரத்தையும் தங்குமிடச் செலவுகளையும் சேர்க்காத மூலாதாரப் பணவீக்கம் 2024ல் உள்ள 2.8 விழுக்காட்டிலிருந்து 1.8 விழுக்காடாகச் சரியும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

வேலைச் சந்தையைப் பொறுத்தமட்டில், சிங்கப்பூரின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 2024 இறுதியில் 2 விழுக்காடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக முன்னுரைக்கப்பட்ட 2.1 விழுக்காட்டைவிட இது சற்று குறைவு.

குறிப்புச் சொற்கள்