சிங்கப்பூர்ப் பொருளியல் தொடர்ந்து துடிப்புடன் திகழப் பன்னாட்டு நிறுவனங்களும் சிறிய, நடுத்தர நிறுவனங்களும் இணைந்து இயங்குவது மிக அவசியம் என்று போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் வலியுறுத்தியுள்ளார்.
பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அவர் பேசினார். நாட்டின் பொருளியலுக்குப் பன்னாட்டு நிறுவனங்களும் சிறிய, நடுத்தர நிறுவனங்களும் ஏன் முக்கியம் என்பதற்கான காரணங்களை இரண்டாம் நிதி அமைச்சருமான திரு சியாவ் முன்வைத்தார்.
சிரமமான உலகச் சூழலுக்கு இடையில், வெளிநாட்டு முதலீடுகளுக்காகச் சிங்கப்பூர் கடுமையாகப் போட்டியிட வேண்டும் என்றும் உள்ளூர் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க மேலும் பாடுபட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
துடிப்பான உள்ளூர் நிறுவனங்கள், ஆரோக்கியமான உள்நாட்டுத் தேவை, வெளிநாடுகளில் கால்பதிக்கும் சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர் மூலதனம் ஆகியவற்றால் இயக்கப்படும் பொருளியல் கட்டமைப்பை இந்த அவை நம்புகிறது என்று பாட்டாளிக் கட்சியின் தீர்மானம் குறிப்பிட்டிருந்தது.
மக்கள் செயல் கட்சியும் பாட்டாளிக் கட்சியும் சிங்கப்பூரின் பொருளியல் மாதிரியைப் புரிந்துகொள்ளும் விதத்தில் கணிசமான வேறுபாடு உள்ளது என்று திரு சியாவ் கூறினார்.
சிங்கப்பூரின் பொருளியல் மாதிரி சமநிலையற்று இருக்கிறது என்றும் அது அடிப்படையிலேயே மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் பாட்டாளிக் கட்சி நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
பன்னாட்டு நிறுவனங்கள் செல்வத்தை உருவாக்கும் இடமாகவும் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அடக்கிவைக்கப்பட்டு, சிங்கப்பூரர்கள் மறுபங்கீட்டின் மூலம் பலன்களைப் பெறும் இடமாகவும் சிங்கப்பூரை அவர்கள் சித்திரித்திருப்பதாகத் திரு சியாவ் சொன்னார்.
“இந்தச் சித்திரிப்பை நான் மறுக்கிறேன்,” என்றார் அமைச்சர்.
அரசாங்கத்தின் உத்திகள் எப்போதும் சிங்கப்பூரர்களை மையமாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளன என்று திரு சியாவ் கூறினார். சிறந்த வேலைகள், அதிக வருமானம், குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்துதல் ஆகிய இலக்குகளை அடைவதற்கான வழியே பொருளியல் வளர்ச்சி என்று அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய பொருளியல் மாதிரி, தலைமுறை தலைமுறையாகச் சிங்கப்பூரர்களுக்குப் பலன் அளித்துள்ளது என்பதையும் அமைச்சர் சியாவ் சுட்டினார்.


