மக்களுக்கு நீண்ட ஆயுளை வழங்கும் வகையில் பொருளியல் வளர்ச்சி: ஓங் யி காங்

மக்களுக்கு நீண்ட ஆயுளை வழங்கும் வகையில் பொருளியல் வளர்ச்சி: ஓங் யி காங்

3 mins read
10e15b1e-f6ce-4fd9-8ed6-243998893c98
ஜூலை 25ஆம் தேதி எஸ்பிஎச் மீடியா அரங்கத்தில் நடைபெற்ற நீண்ட ஆயுள் பற்றிய கருத்தரங்கில் முக்கிய உரையாற்றிய சுகாதார அமைச்சர் ஓங் யி காங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேவையற்ற சுகாதாரச் செலவுகளைத் தவிர்த்து மக்கள் நீண்டகாலம் வாழக்கூடிய பொருளியலை நோக்கி சிங்கப்பூர் முன்னேற வேண்டும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கு உயிர்மருத்துவ அறிவியல், ஊட்டச்சத்து, செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளை வலுப்படுத்தலாம் என்று அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

“சுகாதாரச் செலவுகள் அதிகரிக்காமல் மக்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.

“சிங்கப்பூரில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து முதியோர் சமூகமாக மாறி வருகிறது. ஆனால், முந்தைய தலைமுறையைவிட தற்போதைய முதியோர்கள் அதிக செல்வம் வைத்துள்ளனர். ஓய்வுக்கால வாழ்க்கை, முதலீடுகள், காப்புறுதி, சுற்றுலா, உடல்நலம், பராமரிப்பு ஆகியவற்றுக்கு அவர்கள் அதிக செலவு செய்யக்கூடியவர்களாக இருக்கின்றனர்,” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜூலை 25ஆம் தேதி எஸ்பிஎச் மீடியா அரங்கில் ‘பிஸ்னஸ் டைம்ஸ்’ நாளேட்டின் நீடித்த ஆயுள் பற்றிய கருத்தரங்கு முதல் முறையாக நடைபெற்றது.

அதில் சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஓங் கலந்துகொண்டு பேசினார்.

இன்றைய மூத்த குடிமக்களுக்கு பல்வேறு தேவைகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன. அதற்கு ஏற்ப செலவழிப்பதற்கான அதிக வளங்களும் அவர்களிடம் இருக்கின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

வாழ்நாள் சேமிப்பைப் பயன்படுத்துவதும் உடல்நலத்தை மேம்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற விருப்பமும் நீண்ட ஆயுள் சார்ந்த பொருளியல் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

இருந்தாலும், இத்துறையின் வளர்ச்சி நல்ல சுகாதாரப் பராமரிப்புக்கான அதிக செலவுகளால் ஏற்பட்டுவிடக்கூடாது என்று அவர் எச்சரித்தார்.

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போதும் சராசரியைவிட சிங்கப்பூரர்கள் சுமார் 10 ஆண்டுகள் கூடுதல் ஆயுளுடன் வாழ்கின்றனர்.

இந்நிலையில், தேவையற்ற பரிசோதனைகளும் சிகிச்சைகளும் நன்மைகளுக்குப் பதிலாக சுகாதாரச் செலவுகளை மட்டுமே உயர்த்தும் என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

“தாராளமான கூடுதல் காப்பீட்டுத் திட்டங்கள், கூடுதலாக செலவழிப்பதையே ஊக்கமூட்டுகின்றன. இதனைத் தவிர்ப்பதற்காக அத்தகைய திட்டங்களைக் கட்டுப்படுத்துமாறு அரசாங்கம் காப்புறுதி நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. காப்பீட்டுத் துறையும் அவ்வாறே செய்து வருகிறது,” என்று ஓங் தெரிவித்தார்.

உடல்நலத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவது சுகாதாரப் பராமரிப்பின் ஒரு பகுதி. அதன் பெரும்பகுதி கவலை, பதற்றமான சூழல்களில் ஆரோக்கியத்தைக் கட்டிக்காக்கும் நடவடிக்கைகள் அமைகின்றன.

“தேவைக்கு அதிகமான சேவைகளும் தேவையற்ற சிகிச்சைகளும் பெருகினால், அங்கு ஆரோக்கியமோ செல்வமோ உருவாகாது, அதற்குப் பதில் செலவுகள் மட்டுமே அதிகரிக்கும். இது, உலகம் முழுவதும் உள்ள நிலவரமாகும். இதன் காரணமாக சுகாதாரப் பராமரிப்பு மேலும் செலவுமிக்கதாகவும் கட்டுப்படியாகாத வகையிலும் இருக்கும்.

ஒழுங்குமுறை விதிகளை விதிப்பது மட்டுமல்லாமல் சந்தைகளுக்கு வழிகாட்ட அரசாங்கம் இணைந்து பணியாற்றி வருகிறது.

‘ஹெல்தியர் எஸ்ஜி’, ‘ஏஜ் வெல் எஸ்ஜி’, ஊட்டச்சத்து தரக் குறியீடு போன்ற தெளிவான பொதுச் சுகாதார இலக்குகளையும் கொள்கைகளையும் அமைப்பது இவற்றில் அடங்கும். தனியார் துறையினரும் இதில் தங்களது பங்களிப்பை வழங்க முடியும்.” என்று அமைச்சர் ஓங் தெரிவித்தார்.

எச்எஸ்பிசி லைஃப் வழங்கிய ‘தி பிஸ்னஸ் டைம்ஸ்’ கருத்தரங்கில், ஓய்வுகாலத்தில் ஆரோக்கியமாகவும் நிதிப் பாதுகாப்புடனும் சுதந்திரமாகவும் திகழ்வதற்கு என்ன தேவை என்பதை ஆராய்வதற்காக சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்களும் நீடித்த ஆயுளுக்கான ஆலோசகர்கள், நிதி நிபுணர் ஒருவரும் கலந்துகொண்டு பேசினர்.

நிகழ்ச்சியில் இரண்டு குழு விவாதங்களும் இடம்பெற்றன.

மூப்படைதல், நோய்த்தடுப்பு சார்ந்த சுகாதாரம், நீண்டகால நிதித் திட்டமிடல் ஆகியவற்றில் சிங்கப்பூரர்கள் எவ்வாறு ஒரு முழுமையான அணுகுமுறையைக் கையாளலாம் என்பதை முதல் விவாதம் ஆராய்ந்தது. உடல்நலம், வாழ்க்கையின் நோக்கம், புதியதொரு பரிமாணத்தை அடைதல் ஆகியவை குறித்த உண்மையானக் கதைகளுடன் இரண்டாவது விவாதம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலில் பங்கேற்ற (இடமிருந்து) ‘த பிஸ்னஸ் டைம்ஸ்’ மூத்த செய்தியாளர் டிலான் டான் (கருத்தரங்கை வழிநடத்தியவர்), என்எச்ஜி ஹெல்த் (மருந்தக, கல்வி மேம்பாடு) குழுமத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரி சின் ஜிங் ஜி, எச்எஸ்பிசி லைஃப் (சிங்கப்பூர்) தலைமை நிர்வாக அதிகாரி ஹர்பிரீத் பிந்த்ரா, நோவி ஹெல்த்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுவே ஆன் டோ, ‘சீ லாங்விட்டி’ யின் மூத்த உணவு நிபுணரும் தலைமை மருத்துவ அதிகாரியுமான நரஸ் லாப்சிஸ்.
கலந்துரையாடலில் பங்கேற்ற (இடமிருந்து) ‘த பிஸ்னஸ் டைம்ஸ்’ மூத்த செய்தியாளர் டிலான் டான் (கருத்தரங்கை வழிநடத்தியவர்), என்எச்ஜி ஹெல்த் (மருந்தக, கல்வி மேம்பாடு) குழுமத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரி சின் ஜிங் ஜி, எச்எஸ்பிசி லைஃப் (சிங்கப்பூர்) தலைமை நிர்வாக அதிகாரி ஹர்பிரீத் பிந்த்ரா, நோவி ஹெல்த்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுவே ஆன் டோ, ‘சீ லாங்விட்டி’ யின் மூத்த உணவு நிபுணரும் தலைமை மருத்துவ அதிகாரியுமான நரஸ் லாப்சிஸ். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்