சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகம் (இடிபி) அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதன் பெருநிறுவன முதலீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு $32 மில்லியன் நிதியளிக்க கடப்பாடு தெரிவித்துள்ளது.
அதன் மூலம் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டுள்ள நிறுவனங்கள் புதிதாகத் தொழில் தொடங்கும் நிறுவனங்களுடன் பங்காளித்துவத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
பெருநிறுவன முதலீட்டு தொடங்குதளம் (Corporate Venture Launchpad - சிவிஎல்) மூலம், இடிபி-யின் புதிய முதலீடுகள் குழுவும் அதனால் நியமிக்கப்பட்ட ஒன்பது பங்காளித்துவ அமைப்புகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து வளர்ச்சி காணக்கூடிய திட்டங்களில் புத்தாக்கத்தை விரிவுபடுத்த முடியும்.
இந்தப் பங்காளித்துவ அமைப்புகள் புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களுடன் இணைந்து புதிய திட்டங்களில் முதலீடு செய்வதில் நிறுவனங்களுக்கு வழிகாட்டும்.
இந்த மூன்றாவது தவணை நிதியானது, 2022ஆம் ஆண்டில் அதன் சிவிஎல் திட்டத்தின் இரண்டாம் பதிப்பிற்கு வழங்கிய $20 மில்லியனை விட 50 விழுக்காடு அதிகமாகும். 2021 மே மாதம், இந்தத் திட்டம் 10 மில்லியன் நிதியுதவியுடன் தொடங்கப்பட்டது.
“நிறுவனங்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களிடையே தவறான எதிர்பார்ப்புகள் இருந்தன என்று நாங்கள் கேள்விப்பட்டோம்,” என்று சிவிஎல் 3.0 திட்டத்தின் தொடக்க விழாவில் பேசிய பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் திருவாட்டி ஜேக்லின் போ கூறினார்.
உள் செயல்முறைகள் புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு ஏற்றதாக இல்லை. நிறுவனங்களின் பிரச்சினைகளுடன் புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களை பொருந்த செய்வது கடினமாக உள்ளது. மேலும் பெரிய நிறுவனங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வர்த்தக பின்விளைவுகளைப் பற்றிய தெளிவான பார்வை இல்லை ஆகியவை அந்த தவறான எதிர்பார்ப்புகள் என்று திருவாட்டி போ பட்டியலிட்டார்.
இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, “சிவிஎல் 3.0 திட்டம் உள்ளூர் நிறுவனங்களுக்கான திறனை வளர்க்கும் திட்டத்தைக் கொண்டிருக்கும். இது புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களுடன் பணிபுரிவதற்கான சிறந்த நடைமுறைகளை நிறுவுவதற்கும், புதிதாக தொழில் தொடங்கும் உயர்தர நிறுவனப் பங்காளிகளுக்கான அணுகுமுறையை அதிகரிப்பதற்கும் உதவும்,” என்றும் திருவாட்டி போ விவரித்தார்.
தொடர்புடைய செய்திகள்
தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் புதிதாக தொழில் தொடங்கும் தங்கள் பங்காளிகளுடன் திட்டங்களை இயக்க கூடுதல் மானிய ஆதரவுடன், மனிதவளம், நிபுணத்துவ சேவைகளுக்கான செலவில் பாதி வரை இடிபி நிதியளிக்கும்.
“அதே நேரத்தில், புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் பங்காளித்துவம், ஆதரவு ஆகியவற்றின் வழியாக பெரிய அளவில் பயனடையும்.
“புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்கள், பெருநிறுவனங்களின் தேவையைப் பூர்த்தி செய்ய வாய்ப்பு கிடைக்கும். அதன் மூலம் சிங்கப்பூரில் அவை தங்கள் வர்த்தகத்தைப் பெருக்கிக்கொள்ளலாம்,” என்றும் திருவாட்டி போ விளக்கமளித்தார்.
இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, பொருளியல் வளர்ச்சிக் கழகம் 14 புதிய திட்டங்களைத் தொடங்குவதில் 24 நிறுவனங்களுக்கு ஆதரவளித்துள்ளது என்றும் புதிய முதலீடுகளுக்கான திட்டங்கள் விரைவில் அறிமுகமாகலாம் என்றும் பிசினஸ் டைம்ஸ் செய்தி தெரிவித்தது.