எந்த வயதிலும் கல்வியைக் கைவிடாமல் தொடர்ந்து கற்றுக்கொள்வதே வெற்றிக்கான திறவுகோல் என்று நம்புகிறார் சிறைச்சாலை பள்ளியில் பயிலும் 31 வயது சிறைவாசி நபில் (உண்மை பெயரன்று).
தானா மேரா சிறைச்சாலைக் கட்டடத்தில் அமைந்துள்ள சிறைச்சாலை பள்ளியில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) தங்களது 2024ஆம் ஆண்டின் ‘ஓ’ நிலை தேர்வுகளின் முடிவுகளைப் பெற்ற எட்டு மாணவர்களில் இவரும் ஒருவர்.
கடந்த ஆண்டு தேர்வெழுதிய 21 சிறைவாசிகளில், 90.5 விழுக்காடு ஒரு பாடத்திலாவது தேர்ச்சி விகிதத்தை எட்டினர். ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தேர்ச்சிகளைப் பெறும் மாணவர்களின் விழுக்காடு, 2023ல் 26.9 விழுக்காட்டிலிருந்து 2024ல் 38.9 விழுக்காட்டிற்கு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக இதற்குமுன் இரண்டு முறை சிறைத் தண்டனை பெற்ற நபில், போதைப்பொருள் பழக்கத்திலிருந்து முற்றிலும் விடுபடுவதற்காக தனது தற்போதைய தண்டனைக் காலத்தில் சிறைச்சாலைப் பள்ளியில் சேர்ந்ததாகச் சொன்னார்.
“இந்தப் பயணத்தில் நான் பல சவால்களை எதிர்கொண்டேன். 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பள்ளியைச் சேர்ந்து படித்ததோடு ஒன்பது மாதங்களில் முழு பாடத்திட்டத்தைப் புரிந்துகொள்வதற்கு கடினமாக உழைக்க வேண்டியிருந்தது,” என்று அவர் பகிர்ந்துகொண்டார்.
இத்தனை சவால்கள் இருந்தபோதிலும், நபில் தனது ஆசிரியர்கள், சக மாணவர்கள் ஆகியோரின் ஆதரவுடன் ‘ஓ’ நிலை தேர்வுகளில் ஆறு பாடங்களில் நான்கு பாடங்களில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
ஜூலையில் தனது விடுவிப்புக்குப் பிறகு, ‘ஏ’ நிலை தேர்வுகளை வெற்றிகரமாக முடித்து, வர்த்தகத்தில் பட்டப்படிப்பைத் தொடர அவர் ஆசைப்படுகிறார்.
“என் மீது எனது பெற்றோர் வைத்திருந்த நம்பிக்கையை மறுபடியும் மீட்டெடுத்து அவர்களைப் பெருமிதம் கொள்ள வைப்பதே எனது நோக்கமாகும். அதுமட்டுமல்லாமல், என்னால் முடிந்தவரை சமூகத்திற்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கியும் நான் கடினமாக உழைக்க போகிறேன்,” என்றார் அவர்.
“தங்கள் வாழ்க்கையில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் சிறைச்சாலை பள்ளியில் பயிலும் மாணவர்கள் செயல்படுகிறார்கள். கல்வியே அவர்களின் வாழ்க்கையை மாற்றி அமைப்பதற்கான வழி என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
“தொடர்ந்து உழைத்து அதற்கான பலனை அவர்கள் இங்கு பெறும்போது, சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைவதற்கான தன்னம்பிக்கையை அவர்கள் பெறுகிறார்கள்,” என்று நபிலின் சிறைச்சாலைப் பள்ளி ஆசிரியரும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வித்துறையில் அனுபவம் கொண்டவருமாகிய திருவாட்டி மரியா தியா, 60, கூறினார்.

