ஈராண்டுகளுக்குமுன் உலகளவில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட, கடத்தப்பட்ட செயற்கை போதைப்பொருள்களாக மெத்தம்ஃபெட்டமைனும் ஆம்ஃபெட்டமைனும் தொடர்ந்து நீடித்தன.
2023ல் ஆம்ஃபெட்டமைன் வகைப் பொருள்களின் பறிமுதல் சாதனை அளவை எட்டியதோடு உலகளவில் கைப்பற்றப்பட்ட அனைத்து செயற்கை போதைப்பொருள்களிலும் கிட்டத்தட்ட அது பாதியளவில் இருந்தது.
2024ஆம் ஆண்டில் கிழக்கு, தென்கிழக்காசியாவில் சாதனை அளவாக 236 டன் மெத்தம்ஃபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி), 2025ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவில் போதைப்பொருள்களை பறிமுதல் செய்தது. அவற்றின் சந்தை மதிப்பு ஏறத்தாழ $21.95 மில்லியன் எனக் கூறப்பட்டது.
போதைப் பொருள் விநியோகம், தேவையைக் கட்டுப்படுத்தவும், குற்றவாளிகளின் சட்டவிரோத பண ஆதாயங்களைத் தடுக்கவும் இடைவிடாத அமலாக்க நடவடிக்கைகளை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.
போதைப்பொருள் தடுப்புக் கல்வி, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் தீங்குத் தடுப்பு அணுகுமுறையின் முக்கிய அங்கமாகவும், சிங்கப்பூரின் போதைப்பொருள் தடுப்பு உத்தியில் முதன்மையான பாதுகாப்பு அரணாகவும் திகழ்கிறது.
அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த அணுகுமுறை, வலுவான சமூக ஒத்துழைப்பு, அர்ப்பணிப்புமிக்க தன்னார்வலர்கள் மூலம் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு இளையர்களுக்கும், பொதுமக்களுக்கும் போதைப்பொருள்கள் குறித்த துல்லியமான தகவல்களைத் தொடர்ந்து வழங்கி வர முடிகிறது.
மக்கள் போதைப் பழக்கமற்றவர்களாகத் திகழவும், விழிப்புணர்வுடன் கூடிய முடிவுகளை எடுக்கவும், தங்கள் அன்புக்குரியவர்கள், நண்பர்கள் மத்தியில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவும் அது உதவுகிறது.
தொடர்புடைய செய்திகள்
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பங்காளியான தேசியப் போதைப் புழக்கத் தடுப்பு மன்றம் போதைப்பொருள் தடுப்பில் கல்வி, விழிப்புணர்வுப் பணிகள், ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான அணுகுமுறையை மேற்கொள்கிறது.
மக்கள் போதைப் பழக்கமற்றவர்களாகத் திகழ தேவையான அறிவையும் தன்னம்பிக்கையையும் வழங்கும் திட்டங்களை மன்றம் முன்னெடுத்து, ஆதரவளித்து, இணைந்து உருவாக்குகிறது.

