மின்சிகரெட் புகைத்ததாகச் சந்தேகிக்கப்படும் இளையர் மயங்கி விழுந்ததைப் பார்த்த கல்வி அமைச்சர்

மின்சிகரெட் புகைத்ததாகச் சந்தேகிக்கப்படும் இளையர் மயங்கி விழுந்ததைப் பார்த்த கல்வி அமைச்சர்

1 mins read
7c858288-c93b-4ce5-ad7c-87360eb4b62f
வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் ஒரு சனிக்கிழமை காலை 9 மணிக்கு, இளையர் ஒருவர் தடுமாறி நடந்து தம்மை நோக்கி வருவதைக் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கண்டார்.

“அவர் என் திசையில் நடந்து வந்தார். அவர் நிலையற்ற, மிகைப்படுத்தப்பட்ட நடை, மிகைப்படுத்தப்பட்ட அசைவுகளுடன் காணப்பட்டார்,” என்று நினைவுகூர்ந்த திரு லீ, அந்த பதின்மவயதுச் சிறுவன் சோர்ந்துபோய், ‘ஏதோ போதை மருந்து உட்கொண்டதுபோல்’ இருந்ததாக வர்ணித்தார்.

இச்சம்பவம் குறித்து வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பேசிய திரு லீ, இன்னும் சில அடிகள் எடுத்துவைத்த பின் அச்சிறுவன் மயங்கி விழுந்ததாகச் சொன்னார்.

“உடனடியாக அவசரகாலச் சேவைகள் அழைக்கப்பட்டன. அவரது கையில் மின்சிகரெட் போன்று ஒன்று இருந்தது,” என்று திரு லீ கூறினார்.

அச்சிறுவன், ‘எட்டோமிடேட்’ கலந்த மின்சிகரெட்டைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டதால், சுகாதாரச் சேவை அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரிக்கத் தொடங்கியதாக அவர் தெரிவித்தார்.

“ஆகவே, ‘எட்டோமிடேட்’ போன்ற போதைப்பொருளைப் பயன்படுத்துவதற்கான ஒரு நுழைவாயிலாக மின்சிகரெட் தெளிவாகத் தீங்கு விளைவிக்கும். அவை இளையர்கள்மீது தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன,” என்று திரு லீ கூறினார்.

பள்ளிகளிலும் உயர் கல்விக் கழகங்களிலும் மின்சிகரெட் தொடர்பான குற்றங்களுக்காக பிடிபடும் மாணவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை அவர் அறிவித்தார்.

குறிப்புச் சொற்கள்