புறப்பாட நடவடிக்கைகளுக்குப் பேருந்துக் கட்டண உயர்வு கோரிக்கைகளைப் பரிசீலிக்குமாறு பள்ளிகளைக் கேட்டுக்கொள்ளும் கல்வி அமைச்சு

புறப்பாட நடவடிக்கைகளுக்குப் பேருந்துக் கட்டண உயர்வு கோரிக்கைகளைப் பரிசீலிக்குமாறு பள்ளிகளைக் கேட்டுக்கொள்ளும் கல்வி அமைச்சு

2 mins read
1f80e94e-a09d-4a3c-81d7-73a6d39bb1ab
ஏப்ரல் 14ஆம் தேதியன்று, 40க்கும் மேற்பட்ட பேருந்து நிறுவனங்களைப் பிரதிநிதிக்கும் சிங்கப்பூர் பள்ளிப் போக்குவரத்துச் சங்கம், தங்கள் தற்காலிகப் பேருந்து ஒப்பந்தங்களில் மாற்றங்களைக் கோருவதற்குப் பள்ளிகளை அணுகலாம் என்று அதன் உறுப்பினர்களுக்குத் தெரிவித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதிகரித்து வரும் எரிபொருள் செலவுகளைக் கருத்தில் கொண்டு கற்றல் பயணங்கள், போட்டிகள் போன்ற புறப்பாட நடவடிக்கைகளுக்குப் பள்ளிகள் செலுத்தும் கட்டணத்தை உயர்த்துமாறு தனியார் பேருந்து நிறுவனங்களிடமிருந்து வரும் கோரிக்கைகளை நியாயமான முறையில் பரிசீலிக்குமாறு கல்வி அமைச்சு பள்ளிகளுக்குத் தெரிவித்துள்ளது.

பள்ளிச் செயல்பாடுகள் மற்றும் மாணவர்களின் கற்றல் அனுபவங்கள் மோசமாகப் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு புதன்கிழமை (ஏப்ரல் 15) இரவு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தது.

பெற்றோர் கட்டணம் செலுத்தும் வழக்கமான பள்ளிப் பேருந்து சேவைகளைப் போலல்லாமல் போட்டிகள், கற்றல் பயணங்கள் மற்றும் பிற புறப்பாட நடவடிக்கைகள், அவ்வப்போது மேற்கொள்ளப்படும் தற்காலிகப் பயணங்களுக்குப் பள்ளிகளே நேரடியாக நிதியளிக்கின்றன. இந்தப் பயணங்களுக்கான செலவுகள் பொதுவாக ஒப்பந்தங்கள் மூலம் உறுதிசெய்யப்படுகின்றன. அவற்றை இப்போது மாற்றியமைக்கப் பேருந்து நிறுவனங்கள் முற்படலாம்.

வழக்கமான பள்ளிச் சேவைகளுக்கு ஏற்படும் அதிக எரிபொருள் செலவுகளைச் சமாளிக்கப் பேருந்து நிறுவனங்களுக்கு உதவும் வகையில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களுக்குக் கட்டண வருவாயில் 13 விழுக்காட்டிற்குச் சமமான தற்காலிக நிதியுதவியை அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது. இது மேற்கண்ட தற்காலிகப் பயணங்களுக்குப் பொருந்தாது.

சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின் ‘பிரைஸ் காக்கி’ செயலியின்படி, ஏப்ரல் 16ஆம் தேதி நிலவரப்படி, பெரும்பாலான முக்கியச் சில்லறை விற்பனையாளர்களிடம் ஒரு லிட்டர் டீசல் $4.68 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஈரான் போர் தொடங்கிய பிப்ரவரி மாத இறுதியில் ஒரு லிட்டருக்குச் சுமார் $2.50 ஆக இருந்த விலை தற்போது இவ்வாறு உயர்ந்துள்ளது.

நேரம், தேவைப்படும் பேருந்தின் வகை மற்றும் தூரம் போன்றவற்றைப் பொறுத்து, இருவழிப் பள்ளித் தற்காலிகப் பயணம் இப்போது $100 முதல் $200 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 14ஆம் தேதியன்று, 40க்கும் மேற்பட்ட பேருந்து நிறுவனங்களைப் பிரதிநிதிக்கும் சிங்கப்பூர் பள்ளிப் போக்குவரத்துச் சங்கம், தங்கள் தற்காலிகப் பேருந்து ஒப்பந்தங்களில் மாற்றங்களைக் கோருவதற்குப் பள்ளிகளை அணுகலாம் என்று அதன் உறுப்பினர்களுக்குத் தெரிவித்தது.

பள்ளிகளைத் தொடர்புகொண்ட சில பேருந்து நிறுவனங்களிடம், வழக்கமான பேருந்து சேவைகளுக்கு வழங்கப்படும் 13 விழுக்காட்டு ஆதரவைப் போன்றே இந்தக் கட்டண உயர்வும் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் திரு எட்மண்ட் லீ தெரிவித்தார்.

அமைச்சின் உதவியை சங்கம் பாராட்டும்போதிலும், மத்திய கிழக்குப் போரால் ஏற்பட்டுள்ள டீசல் விலையேற்றத்தை ஈடுகட்டப் பேருந்து நிறுவனங்களுக்குக் கட்டணங்கள் 30 விழுக்காடு முதல் 40 விழுக்காடு வரை உயர்த்தப்பட வேண்டும் என்று திரு லீ கூறினார்.

குறிப்புச் சொற்கள்