அடுத்த 10 ஆண்டுகளுக்கான திறன்களை கல்வி போதிக்க வேண்டும்: அமைச்சர் சான்

2 mins read
053ab575-393d-4306-ba52-91aae8900182
பட்டதாரிகள் வேலைவாய்ப்பு பற்றிய அண்மைய ஆய்வில் 79.5 விழுக்காட்டினருக்கு 2024ஆம் ஆண்டில் முழுநேர வேலை கிடைத்ததாக தெரியவந்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பல்கலைக்கழக, பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் பட்டப் படிப்பை முடிக்க மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகின்றன.

இந்நிலையில், வேலைவாய்ப்புப் சந்தையில் ஏற்படக்கூடிய குறுகிய கால சுழற்சிப் போக்குக்கும் அப்பால் நீண்டகாலச் சூழலை கல்வி அமைச்சு ஆராய வேண்டியுள்ளதாக கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.

இது பற்றிக் கூறிய அவர், “பாடத் திட்டத்தை வடிவமைக்கும்போது நீண்டகாலச் சூழலை மனத்தில் கொள்ளவேண்டும். வேலைச் சந்தைக்குத் தேவைப்படும் திறன்கள், அதுவும் அடுத்த ஓரிரண்டு ஆண்டுகளுக்குத் தேவையான திறன்களைப் பார்க்காமல் அடுத்த ஐந்து, பத்தாண்டுகளுக்கு தேவையான திறன்களைக் கருத்தில்கொள்கிறோம்.

“அதைவிட முக்கியமாக புதிய, தற்பொழுது இல்லாத, வேலைகளுக்கு மாறுவதற்கும் தேவையான கூடுதல் திறன்களை மாணவர்கள் பெறுவதையும் கருத்தில் கொள்கிறோம்,” என்று விளக்கினார்.

வெள்ளிக்கிழமை (மார்ச் 7) நாடாளுமன்றத்தில் 2024ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பட்டதாரி வேலைவாய்ப்பு தொடர்பான ஆய்வு குறித்து கேட்கப்பட்ட துணைக் கேள்விகளுக்குக் கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார். பிப்ரவரி 24ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்த ஆய்வு 2024ஆம் ஆண்டில் முன்பிருந்ததைவிடக் குறைவான பட்டதாரிகளுக்கு வேலை கிடைத்துள்ளதைச் சுட்டியது.

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெசிக்கா டான், அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரித்தம் சிங் ஆகியோர் பட்டதாரிகள் பெற்றுள்ள திறன்களில் குறைபாடு உள்ளதா என்று வினவினர். மேலும், குறைவான பட்டதாரிகளுக்கு வேலை கிடைத்தது பட்டதாரிகளுக்கான நீண்டகால வேலைவாய்ப்புகளைப் பிரிதிபலிப்பதாக உள்ளதா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அத்துடன், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பட்டக் கல்வியின் உள்ளடக்கத்தை மறுபரிசீலனை செய்து மாணவர்கள் பெறும் கல்வி அவர்கள் பல்வேறு வேலைவாய்ப்புகளுக்குத் தகுதி பெறும் கூடுதல் திறன்களை பெறுவதற்கு ஏற்ப மாற்றியமைக்கப்படுமா என்றும் திரு பிரித்தம் சிங் கேட்டிருந்தார்.

பின்னர், பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறுவது பற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் சான், “எத்தனை பட்டதாரிகளை ஆண்டுதோறும் உருவாக்குகிறோம் என்பது முக்கியமன்று, மாறாக, அவர்களுக்கு நல்ல வேலைகள் கிடைக்கும் வகையில் பட்டதாரிகளிடம் திறன்களை உருவாக்குவதே முக்கியம்,” என்று விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்