உயர்கல்வி நிலையத்தில் பயிலும் முஸ்லிம் மாணவர்களுக்குப் புதிய உதவி நிதி

2 mins read
333d9256-a0d7-4a70-891b-1bfc3d0da210
வலக்கொடியிலிருந்து பரக்கத் நிதியின் பிரதிநிதிகள்: திரு ராஜா முகமது மைதீன், திரு மு.அ.மசூது. படம்: மெண்டாக்கி -

தொழில்நுட்பக் கல்விக் கழகம், பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவர்களுக்கு அவர்களின் கல்வி செலவுகளுக்கு உதவும் புதிய உதவித் திட்டம் அறிமுகமாகியுள்ளது.

'இடிஎஃப்' எனும் கல்வி அறக்கட்டளை நிதிக்காக மெண்டாக்கியுடன் பரக்கத் நிதி இணைந்த புதிய பங்காளித்துவத்தில் $100,000 நன்கொடையுடன் அந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

பரக்கத் நிதியின் பிரதிநிதிகள் மு.அ.மசூது, ராஜா முகமது மைதீன் இருவரும் இன்று மெண்டாக்கியுடன் 'இடிஎஃப்-பரக்கத் கல்வி உதவி நிதி' ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்களுக்கு தலா $1,000 வழங்கப்படும். பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த ஐந்து மாணவர்களுக்கு தலா $1,500 வழங்கப்படும்.

வேறு எந்த கல்வி உதவி நிதியையும் பெறாதவர்கள் இந்தக் கல்வி உதவி நிதியின் மூலம் பயன் பெறலாம். மாதாந்தர குடும்ப வருமானம் $1,800 அல்லது அதற்கு குறைவாகவோ மாதாந்தர குடும்ப உறுப்பினர் வருமானம் சராசரியாக $450க்கு குறைவாகவோ இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். நல்ல மதிப்பெண்கள் பெற்ற முஸ்லிம் சிங்கப்பூரர்கள் இதற்குத் தகுதி பெறுவர்.

இந்த கல்வி ஆதரவின் மூலம் மேலும் அதிக முஸ்லிம் மாணவர்கள் அவரவர் துறைகளில் சிறந்து விளங்குவதுடன் சமூகத்துக்கும் எதிர்காலத்தில் பங்காற்றுவார்கள் என்று நம்புவதாகக் கூறினர் திரு மசூதும் ராஜா முகமதும்.

"கல்விதான் சமுதாயத்தில் சீரான நிலையை உருவாக்கும். மெண்டாக்கியின் கல்வி அறக்கட்டளை நிதியுடன் இணைந்து எங்கள் பங்கை ஆற்றுவதில் பெருமைக்கொள்கிறோம்," என்று கூறினார் திரு மசூது.

"கல்வியிலும் வாழ்க்கையிலும் சிறந்து விளங்குவதற்கு உதவும் நிதியை நம் பிள்ளைகள் பெறவேண்டும் என்று விரும்புகிறோம். நல்ல நோக்கத்துக்காக 'இடிஎஃப் பரக்கத்' கல்வி உதவி நிதி மூலம் இன்னும் பலர் நன்கொடை வழங்கி பங்களிப்பார்கள் என்று நம்புகிறோம்," என்றார் திரு மசூது.

சமூகத்தில் வசதி குறைந்தவர்களுக்கு மற்றவர்கள் உதவுவதை ஊக்குவிக்க 2017ல் பரக்கத் கல்வி உதவி நிதிக்கான யோசனையை திரு மசூது முன்வைத்தார்.

திரு மசூதும் திரு ராஜா முகமதும் கொடுத்த ஆதரவிற்கு நன்றி நல்கினார் மெண்டாக்கியின் தலைமை நிர்வாக அதிகாரி திருவாட்டி ஸுரைதா அப்துல்லா.

"இந்தக் கல்வி உதவி நிதியை அமைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். நிதி சார்ந்த கவலைகள் இல்லாமல் கனவுகளை நோக்கி, அதை அடைய மாணவர்கள் கவனம் செலுத்த முடியும்.

மெண்டாக்கியும் சமூகமும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும்," என்றார் அவர். மெண்டாக்கியின் இணையத்தளத்தில் இந்தக் கல்வி உதவி நிதிக்கு விண்ணப்பிப்பது பற்றிய தகவல் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.