வெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் உறுப்பினர்கள் இனிமேல் இணையக் கற்றல் தளத்தின் மூலம் சிறப்பு வகுப்புகளில் பயிலலாம்; தள்ளுபடிக் கட்டணத்தில் திரைப்பட நுழைவுச்சீட்டுகளை வாங்கலாம்.
வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும், மலிவுக் கட்டணத்தில் பொழுதுபோக்குகளைத் தேர்வுசெய்யவும் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) நடைபெற்ற தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) வெளிநாட்டு ஊழியர்களுக்கான மே தினக் கொண்டாட்டத்தில் இந்த உடன்பாடுகள் கையெழுத்தாயின.
தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ், வெளிநாட்டு ஊழியர் நிலையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடந்த இந்த வருடாந்தர நிகழ்ச்சியில் வெளிநாட்டு ஊழியர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், இதர விருந்தினர்கள் எனக் கிட்டத்தட்ட 26,000 பேர் கலந்துகொண்டனர். வெளிநாட்டு ஊழியர் நிலைய பொழுதுபோக்கு மன்றம், துவாஸ் தெற்கில் உள்ள துவாஸ் வியூ ஊழியர் தங்குவிடுதி ஆகிய இரு இடங்களிலும் கொண்டாட்டம் இடம்பெற்றது.
கற்றலை ஊக்குவிக்க, வெளிநாட்டு ஊழியர் நிலையம், குரோ எடுகேஷன் இணைந்து அதன் குரோ ஸ்டுடியோ தளத்தில் படிப்புகளை நடத்தும். இது அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட பாடத் திட்டங்கள், படிப்புகள், வினாவிடைகளை வழங்குகிறது.
வெளிநாட்டு ஊழியர் நிலைய உறுப்பினர்களுக்கு மட்டுமேயான ஆங்கிலம் கற்பதற்கான சிறப்புப் பயிற்சிகளும் அத்தளத்தில் இடம்பெறும்.
கார்னிவல் சினிமா உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம், வெளிநாட்டு ஊழியர் நிலைய உறுப்பினர்களுக்கு திங்கள் முதல் வியாழக்கிழமை வரை திரைப்பட நுழைவுச்சீட்டுகளை பாதிக் கட்டணத்தில் வழங்குகிறது. பீச் ரோட்டிலுள்ள திரையரங்கில் படம் பார்க்க வழக்கமான $16 கட்டணத்திற்கு பதிலாக $8 கொடுப்பார்கள்.
வெளிநாட்டு ஊழியர் நிலையத்தில் 147,000 உறுப்பினர்கள் இந்தப் புதிய திட்டங்கள் மூலம் அனுகூலம் பெறுவர்.
தொடர்புடைய செய்திகள்
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட என்டியுசி துணைத் தலைமைச் செயலாளர் டெஸ்மண்ட் டான், அவர்களது தேவைகள் குறித்து வெளிநாட்டு ஊழியர்களிடம் தொழிற்சங்கம் கருத்து கேட்டு வருவதாகக் கூறினார்.
“வெளிநாட்டு ஊழியர்களின் தனிப்பட்ட வளர்ச்சி கவனிக்கப்படுவதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். வேலை கிடைப்பது முக்கியம், ஆனால் அவர்கள் தங்கள் திறன்களையும் அறிவையும் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும். எனவே வெளிநாட்டு ஊழியர்கள் இணையம் வழி தங்களை வளர்த்துக்கொள்ளலாம் என்பதை ஆராய பங்குதாரருடன் இணைந்து செயல்பட்டோம். ஏனெனில் நேரமும் அவர்களுக்கு ஒரு கவலையாக இருக்கலாம்,” என்று கல்விப் பயிற்சிகள் குறித்து திரு டான் கூறினார்.
தள்ளுபடிக் கட்டணத்தில் திரைப்பட நுழைவுச்சீட்டுகள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு மற்றொரு பொழுதுபோக்கு தேர்வை வழங்கும் என்று பிரதமர் அலுவலக மூத்த துணை அமைச்சருமான திரு டான் கூறினார்.
நிகழ்ச்சியில் வெளிநாட்டு ஊழியர் நலனை மேம்படுத்தும் நோக்கில் வெளிநாட்டு ஊழியர் நிலையம் இரு புதிய நலவாழ்வுத் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியது.
தங்கள் நேரத்தை வழங்கி, சக ஊழியர்களுக்கு ஆதரவளிக்க முயற்சி எடுக்கும் தொண்டூழியர் வெளிநாட்டு ஊழியர் நிலையத் தூதர்களாக நியமிக்கப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக, சிங்கப்பூருக்குப் புதிதாக வரும் வெளிநாட்டு ஊழியர்கள் இங்குள்ள வேலைவாய்ப்புச் சட்டங்களைப் புரிந்துகொள்ளவும் சமூகத்தில் சுமூகமாக ஒருங்கிணைய உதவுவதற்கும் இத்தூதர்கள் உதவி புரிவர்.
இந்த 5,700 தூதர்களுக்கு தற்போது மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் விடுமுறை நாள்களில் அல்லது வேலை இடைவேளையில் ஓய்வெடுக்க முடியும்.
மற்றது வெளிநாட்டு ஊழியர் நிலையப் பொழுதுபோக்கு மன்றத்தில் 60 சதுர மீட்டர் உடற்பயிற்சிக் கூடம். இது புதிய உபகரணங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஈராண்டுகளாக, வெளிநாட்டு ஊழியர் சமூகத்தில் உடலுறுதி மீதான ஆர்வம் அதிகரித்து வருவதை நிலையம் உணர்ந்துள்ளது.
வெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் தூதர் சுப்பையா அய்யப்பன், 42, மன்ற இடத்தில் கேரம் போன்ற விளையாட்டுகளை விளையாடப் போவதாகவும், நட்புகளைத் தொடரப் போவதாகவும் கூறினார்.
“முன்னர் ஓய்வெடுக்கவும் வசதியாக உணரவும் இதுபோன்ற இடம் இல்லை. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று கடந்த 2013 முதல் சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த செயல்பாட்டு ஒருங்கிணைப்பாளர் கூறினார்.
வெளிநாட்டு ஊழியர் நல தொண்டூழிய அமைப்பான இட்ஸ்ரெய்னிங்ரெயின்கோட்ஸ் துவாஸ் தெற்கு பொழுதுபோக்கு மையத்தில் பகிர்ந்துண்ணும் நிகழ்ச்சியை நடத்தியது. அதில் கிட்டத்தட்ட 2,000 ஊழியர்கள் பங்கேற்றனர்.