வருங்காலத்தை வடிவமைக்கும் கல்விப் பாதைகள்

3 mins read
7b344d61-c75b-4ec6-ac9c-87fe1dd07898
படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆண்டிறுதி முதல் புத்தாண்டு பிறந்து இரு மாதத்திற்குள் சிங்கப்பூர் கல்வித்திட்ட அட்டவணையில் மூன்று முக்கிய தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்படும். தொடக்கப் பள்ளித் தேர்வு முடிவுகள் நவம்பர் இறுதியிலும், உயர்நிலைப் பள்ளித் தேர்வு முடிவுகள் ஜனவரி மத்தியிலும், புகுமுக வகுப்புகளுக்காத தேர்வு முடிவுகள் பிப்ரவரி முதல் வாரத்திலும் வெளியாகும். பயத்தோடும் பதற்றத்தோடும் மாணவர்களும் பெற்றோரும் காத்திருக்க, முடிவுகள் வெளியானதும் பலர் முகங்களில் மகிழ்ச்சி, சிலர் முகங்களில் வருத்தம், கேள்விக்குறிகள்.

இம்மூன்றுத் தேர்வுகளும் ஒரு மாணவரின் கற்றல் பயணத்தையும் எதிர்கால வாழ்க்கைச் சூழலையும் நிர்ணயிக்கக் கூடியவை. அவரவர் செயல்திறனுக்கேற்பப் பாதைகள் பிரிந்து செல்லும். எதிர்காலத்தில் அவர்கள் சென்றடையும் இடம் வேறுபட்டிருக்கும் என்பதை நம்மில் பலர் உணரந்திருக்கிறேம், கண்டிருக்கிறோம்.

சிங்கப்பூரின் கல்விப் பாதைகள் மாணவர்களின் வருங்காலத்தைத் தீர்மானிக்கக் கூடியவை. அவை ஒரு மாணவனின் எதிர்காலச் சமூகப் பொருளாதார நிலையைத் (Socio-Economic Status) தீர்மானிக்கும் மிக முக்கியக் காரணிகளாக விளங்குகின்றன. எனவே, ஒவ்வொரு மாணவனும் சிறந்த கல்விப் பாதையில் இடம்பெறுவதை முதன்மை நோக்கமாகக் கொள்ள வேண்டும். உயர்நிலைப் பள்ளியைத் தாண்டி தொடக்கக் கல்லூரிக்கோ (JC) பலதுறைத் தொழிற்கல்லூரிக்கோ (Polytechnic) செல்வதை இலக்காகக் கொள்ள வேண்டும். இந்த இலக்கை அடைவதற்கு ஆரம்பக்காலத் தேர்வுகளில் வெற்றி பெறுவது மிக அவசியம். 

சிங்கப்பூரின் கல்வி முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாட அடிப்படையிலான வகைப்பாட்டு (Subject Based Banding) முறை, மாணவர்களின் தனித்திறன்களை அங்கீகரிப்பதில் ஒரு புரட்சிகரமான மாற்றமாகும். முன்பு இருந்த ‘விரைவு நிலை’ (Express) மற்றும் ‘வழக்க நிலை’ (Normal) என்ற பாகுபாட்டு முத்திரைகள் இப்போது அகற்றப்பட்டு, மாணவர்கள் தங்கள் திறமைக்கேற்பப் பாடங்களைத் தேர்வு செய்யும் வசதி கிடைத்துள்ளது.

இதன்படி, ஒரு மாணவனின் திறனுக்கேற்றவாறு, வெவ்வேறு பாடங்களை வெவ்வேறு நிலைகளில் பயில முடியும். உதாரணமாக ஒரு மாணவர் கணிதத்தில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, ஆங்கிலத்தில் சற்றே பின்தங்கியிருந்தால், அவர் கணிதத்தை உயர்நிலையில் (G3) பயிலும் அதே வேளையில், ஆங்கிலத்தை அவருக்கு ஏற்ற நிலையில் (G2) பயில முடியும். இதன் மூலம், ஒரு மாணவர் ஒரு குறிப்பிட்ட ‘பிரிவுக்குள்’ முடங்காமல், சிறப்பாகச் செய்யும் பாடங்களில் அதிக மதிப்பெண்களைப் பெற்று, அதன் மூலம் பல்கலைக்கழகம் அல்லது பலதுறைத் தொழிற்கல்லூரிகளுக்குச் செல்லும் வாய்ப்பை உறுதி செய்ய முடியும்.

சிங்கப்பூரில் அனைத்துப் பள்ளிகளும் மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தவே இயங்குகின்றன. அனைத்து மாணவர்களும் தங்களின் திறனுக்கேற்பப் பணிகளில் அமரவேண்டுமென்பதே கல்வி அமைச்சின் நோக்கமாக உள்ளது. இருப்பினும், மாணவர்கள் தங்களை உயர்த்திக்கொள்ள, கூடுதல் முயற்சிகளை எடுக்க வேண்டும். 

இந்தக் கல்விப் பயணத்தில் பெற்றோர்களின் பங்கு மிக முக்கியமானது. சிங்கப்பூரின் கல்விப் பாதைகள் குறித்தும், அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்தும் பெற்றோர்கள் ஆழமாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கல்வியின் முக்கியத்துவத்தையும், சமூக ஏணிப்படிகளில் முன்னேறுவதற்கு அது எவ்வளவு அவசியம் என்பதையும் எடுத்துரைக்க வேண்டும். ஆரம்பக்கால வழிகாட்டல் சரியாக அமையும்போது, மாணவர்கள் தங்களின் முழுத் திறனையும் வெளிப்படுத்திச் சமூகத்தில் ஓர் உயர்ந்த நிலையை அடைய முற்படுவார்கள்.

கல்வியை ஒரு சுமையாகக் கருதாமல், உலகைப் புரிந்துகொள்ளும் ஒரு கருவியாகப் பார்க்க வேண்டும். பாடப்புத்தகத்தில் உள்ள செய்திகளை நடப்பு வாழ்க்கையோடு ஒப்பிட்டு விளக்கும்போது, அது அவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கும். உதாரணமாக, கணிதத்தை விளையாட்டின் மூலமாகவோ அல்லது சிறு சிறு வீட்டுப் பணிகளின் மூலமாகவோ கற்பிக்கும்போது, கற்கும் ஆர்வம் தானாகவே ஏற்படும். விளையாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை வீணாக்காமல், அதே சமயம் படிப்பதற்கான நேரத்தையும் ஒரு கடமையாக மாற்றினால், பிள்ளைகள் இரண்டையும் ரசிக்கத் தொடங்குவர்.

மேலும், சிறிய வெற்றிகளைக் கொண்டாடுவது மிகவும் அவசியம். ஒரு சவாலான பாடத்தைப் படித்து முடித்தாலோ அல்லது ஒரு தேர்வில் முன்னேற்றம் கண்டாலோ அவர்களைப் பாராட்டத் தவறக்கூடாது. இந்தப் பாராட்டு அவர்களுக்குத் தன்னம்பிக்கையைத் தரும். அதேபோல், அவர்களுக்குப் பிடித்த விளையாட்டுகள் அல்லது பொழுதுபோக்குகளில் ஈடுபடப் போதிய நேரத்தை உறுதி செய்ய வேண்டும்.

உலகச் சூழல் வேகமாய் மாறி வருகிறது. அனைவருக்கும் புரிந்திருந்த வெற்றிப் படிகள் இப்போது இல்லை. வாழ்நாள் கல்வி இப்போது இயல்பு வாழ்க்கையாகிவருகிறது. மாணவர்களாய் இருக்கும்போது மட்டும் படித்தால் போதாது. வேலையில் புதுத்திறன்களை வளர்த்துக் கொள்வது அத்தியாவசியமாகிவிட்டது. வேலை மாற்றங்கள் துரிதமாய் நிகழ்கின்றன. இம்மாற்றங்களை எதிர்கொள்ளும் மன உறுதியையும் செயல் திறனையும் வளர்ப்பதே இன்றைய கல்வியின் நோக்கம். வீட்டுச் சூழலும் சமுதாய நடைமுறைகளும் இதற்கு ஏதுவாக இருந்தால், உலகில் சிங்கப்பூர் தொடர்ந்து வெற்றிபெறும். 

அடுத்த தலைமுறையின் வெற்றிக்கான வித்தினை இப்போதே விதைப்போம்.

குறிப்புச் சொற்கள்