தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
உணவுத் தெரிவுகளை மேம்படுத்த யோசனை

ஜூ சியாட், ஈஸ்ட் கோஸ்ட் திட்டங்களை ஒருங்கிணைக்க பேச்சுவார்த்தை

3 mins read
cfb824d2-d785-40e2-8793-31c6290bfc46
கலாசார, சமூக இளையர்த்துறை அமைச்சர் எட்வின் டோங்கும் துணைப் பிரதமரும் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஹெங் சுவீ கியட்டும், பிடோக் சவுத் ரோடு புளோக் 16ல் உள்ள உணவு நிலையத்தில் தொகுதி உலா மேற்கொண்டனர். - படம்: சாவ் பாவ்

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்குள் தமது ஜூ சியாட் தொகுதி சேர்க்கப்பட்டதை அடுத்து, தற்போதைய திட்டங்களை எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பது குறித்த பேச்சுவார்த்தைகளில் கலாசார, சமூக, இளையர்த்துறை அமைச்சர் எட்வின் டோங் இறங்கியுள்ளார்.

ஈஸ்ட் கோஸ்ட் திட்டத்தின் கீழுள்ள பணிகளுக்கும் ஜூ சியாட்டில் தமது குழுவினர் செய்து வருபவைக்கும் இடையே ஒத்திசைவு அதிகம் இருப்பதாக திரு டோங் கூறினார்.

குடியிருப்பாளர்களுக்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பதற்கு முக்கியத்துவம் தரப்படும் என்று அமைச்சர் டோங் கூறினார்.

வாக்குறுதிகளாகக் கொடுக்கப்பட்ட திட்டங்களின் தொடக்கமும் தொடங்கப்பட்ட திட்டங்களின் தொடர்ச்சியும் உறுதிசெய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) நடந்த மூன்று மணி நேர தொகுதி உலாவிற்கு இடையில், பிடோக் சவுத் ரோடு புளோக் 16ல் உள்ள உணவு நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு திரு டோங் பதிலளித்தார்.

இரண்டு தொகுதிகளிலுமே உணவு நன்றாக இருப்பதாக அவர் சொன்னார். அந்த வகையில், குடியிருப்பாளர்களுக்கு உணவுத் தெரிவுகளின் மேம்பாடு பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் திரு டோங் கூறினார்.

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் திரு டோங் மேற்கொண்டுள்ள முதல் தொகுதி உலா இது. பிடோக்கை தமது தொகுதியாகக் கொண்டுள்ள துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், திரு டோங்குடன் தொகுதி உலா சென்றிருந்தார். அக்குழுத்தொகுதியைச் சேர்ந்த மற்ற நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்போது அங்கில்லை.

மரின் பரேட் குழுத்தொகுதியிலிருந்து திரு டோங்கின் ஜூ சியாட் தொகுதி பிரிக்கப்பட்டதாக மார்ச் 11ல் வெளியிடப்பட்ட தொகுதி எல்லைகள் மறுஆய்வுக்குழுவின் அறிக்கை குறிப்பிட்டது. அவரது தொகுதியும் சாய் சீயிலுள்ள வேறு சில வீவக புளோக்குகளும் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.

இரு தலைவர்களது ஒருமித்த வருகை, அவர்கள் இருவரும் ஒரே தொகுதியில் நிற்கப்போவதைக் காட்டுகிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த துணைப் பிரதமர் ஹெங், ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் இப்போது ஜூ சியாட்டும் அங்கம் வகிப்பதைச் சுட்டினார்.

“எனவே, ஈஸ்ட் கோஸ்ட்டின் ஓர் அங்கமாக எட்வின் இங்கு வருவது குறித்து நான் ஆவலாகக் காத்திருக்கிறேன்,” என்று திரு ஹெங் கூறினார்.

‘ஒரே ஆண்டில் அரசியலுக்கு வந்தோம்’

திரு டோங் தங்களது அணியில் சேர்வதில் குடியிருப்பாளர்கள் நட்பார்ந்த முறையில் காண்பதாக திரு ஹெங் கூறினார்.

ஒருங்கிணைப்பு குறித்த சவால்கள் பற்றிக் கேட்கப்பட்டதற்கு, திரு ஹெங் உடனான தமது உறவுமுறை பற்றி திரு டோங் விவரித்தார்.

“வெவ்வேறு குழுத்தொகுதிகளில் நாங்கள் இருந்தோம் என்பதற்காக, ஒருவரையொருவர் தெரியாது என்பதில்லை. ஒரே ஆண்டில் அரசியலுக்குள் வந்த நாங்கள் இருவரும், தனிப்பட்ட முறையில் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்கள்,” என்று திரு டோங் கூறினார்.

பிடோக்கில் எப்படி திரு டோங் தொகுதி உலா மேற்கொண்டாரோ, அவரது ஜூ சியாட் தொகுதியைத் தற்போதுள்ள ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி அணியும் தொகுதிஉலா மேற்கொள்வதற்கான திட்டங்கள் இருப்பதாக திரு ஹெங் தெரிவித்தார்.

நன்கு நிறுவப்பட்டுள்ள ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள பிரிவின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், அங்குள்ள குடியிருப்பாளர்களின் நம்பிக்கையை வெல்வது திரு டாேங்கிற்கு முக்கியம் என்று திரு ஹெங் கூறினார்.

சேவையை மேம்படுத்துவதற்கு வகைசெய்யும் விதமாக, குடியிருப்பாளர்களின் தேவைகளை மேலும் புரிந்துகொள்ள திரு டோங் விரும்புவதாக திரு ஹெங் கூறினார்.

குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நிரலில் மாற்றங்கள் ஏற்படுமா எனக் கேட்கப்பட்டதற்கு, முழு வேட்பாளர்ப் பட்டியலைப் பிரதமரும் மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளருமான லாரன்ஸ் வோங் வெளியிடுவார் என துணைப் பிரதமர் ஹெங் பதிலளித்தார்.

“அதற்கான அட்டவணை உள்ளது. தயவுசெய்து பொறுமையாக இருங்கள்,” என்றார் திரு ஹெங்.

குறிப்புச் சொற்கள்