சிங்கப்பூரின் தமிழ்க் கலைத்துறையை வடிவமைத்த மூத்த தமிழ்க் கலைஞர்களின் வாழ்க்கையையும், படைப்புப் பணிகளையும் சிறப்பிக்கும் 10 பகுதிகளைக் கொண்ட ஒரு தமிழ் நேர்காணல் தொடர் தயாராகியுள்ளது.
இந்தத் தொடர், மூத்த தமிழ்க் கலைஞர்களைச் சிங்கப்பூரின் கலாசார நினைவுகளில் நிலைநிறுத்துகிறது. வை. சுதர்மன், அமலதாசன், சித்ரா தேவி, பொன் சுந்தரராசு, இராம கண்ணபிரான், க.து.மு இக்பால், செ.ப. பன்னீர்செல்வம், சம்சுதீன், ச. வரதன், இளங்கண்ணன் ஆகியோர் அக்கலைஞர்கள்.
ஆழமான நேர்காணல்களின் வாயிலாக ஒவ்வொரு பகுதியிலும் ஒரு கலைஞரின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாறு, கலைத் தத்துவம், போராட்டங்கள், முக்கிய மைல்கற்கள், அவர் விட்டுச்செல்லும் மரபு குறித்த சிந்தனைகள் ஆகியவற்றைப் பதிவு செய்துள்ளது இத்தொடர்.
அதன் மூலம் பல்லாண்டுகாலக் கலை வாழ்க்கையைப் பற்றிய ஓர் அரிய காணொளி, வாய்மொழி ஆவணம் உருவாக்கப்பட்டுள்ளது.
‘ஒரு கலைஞரின் வாக்குமூலம்’ எனப்படும் இத்தொடரைச் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் தயாரித்துள்ளது.
சிங்கப்பூரின் பன்முகக் கலாசார சமூகத்திற்குள் தமிழ்க் கலைத்துறையின் பரிணாம வளர்ச்சியைத் தடமறிந்து கூட்டுச் சித்திரமாக உருவாக்கியுள்ள இத்தொடரின் 10 பகுதிகளும், பெரும்பாலும் போதிய அளவில் ஆவணப்படுத்தப்படாத கலைஞர்களின் மீள்திறன், தகவமைக்கும் திறன், ஆக்கபூர்வமான உழைப்பு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியுள்ளன.
காணொளித் தொடரின் வெளியீடு சனிக்கிழமை (பிப்ரவரி 21) தேசிய நூலக வாரியத்தில் இடம்பெற்றது.
தேசியக் கலை மன்றம், தேசிய நூலக வாரியம் ஆகியவற்றுடன் திரு ஜோதி மாணிக்கமும் காணொளித் தொடரின் வெளியீட்டிற்கு ஆதரவு தந்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தொடரின் ஒருங்கிணைப்பாளர் ஜெயா ராதாகிருஷ்ணன், இது கொண்டாட்டத்திற்கான ஒரு திட்டமாக மட்டுமன்றி கலாசாரப் பாதுகாப்பிற்கான ஒரு முக்கிய முன்னெடுப்பாகவே உருவாக்கப்பட்டுள்ளதாகச் சொன்னார்.
மூத்த கலைஞர்கள் கலைப் படைப்புகளின் வரலாறுகளை மட்டுமல்லாமல் இடம்பெயர்வு, அடையாளம், கலாசாரப் பரிமாற்றங்கள் குறித்த தங்கள் வாழ்வியல் அனுபவங்களையும் தாங்கி நிற்பதால், அவர்களின் குரல்கள் காலப்போக்கில் மறைந்து போவதற்கு முன்பே அவற்றை ஆவணப்படுத்த வேண்டிய அவசரத் தேவையை இந்தத் தொடர் பூர்த்தி செய்வதாகவும் அவர் கூறினார்.
“கலைஞர்கள் தங்களின் சொந்தக் குரலிலேயே தங்கள் கதைகளைச் சொல்வதற்கு வழிவகுப்பதன் மூலம் கலை மரபு என்பது மேடைப் படைப்புகள் அல்லது கலைத் தொகுப்புகளில் மட்டுமன்றி, நினைவுகள், சிந்தனைகள், வாழ்வியல் அனுபவங்களிலும் நிலைத்திருக்கிறது என்பதை இத்தொடர் உறுதிப்படுத்துகிறது. மேலும், சிங்கப்பூரின் கலாசாரக் கட்டமைப்பில் தமிழ்க் கலைகள் ஒரு பிரிக்க முடியாத அங்கம் என்ற ஆழமான பொதுப் புரிதலை மக்களிடையே உருவாக்குவதற்கும் இது பெரும் பங்களிக்கிறது,” என்றார் ஜெயா.
சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைமை நிர்வாகி அருண் மகிழ்நன், கலை உலகில் முக்கியமான கலைஞர்கள் பலர் மறைந்துவிட்டதாகவும், அவர்களின் கதை சரியாக ஆவணப்படுத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
அவர்களைப் பற்றிப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகச் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் இந்த முயற்சியை எடுத்துள்ளதாக அவர் சொன்னார்.
“தமிழ்க் கலைஞர்களை ஆவணப்படுத்துவது அடுத்துவரும் தலைமுறைகளுக்கு நாம் செய்யவேண்டிய கடமை. ஒவ்வொரு கலைத்துறையிலும் அதனதன் தலைமைத்துவம் இதை ஒரு தொடர் திட்டமாக மேற்கொண்டு செய்யவேண்டும்,” என்றார் திரு அருண் மகிழ்நன்.
“எனது எழுத்துப் பயணத்தை இந்த ஆவணப்படத்தில் பகிர்ந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி. இது இளையர்களைச் சென்றுசேர வேண்டும்,” என்றார் திரு க.து.மு இக்பால்.
ஒவ்வொரு பகுதியின் கால அளவு கிட்டத்தட்ட 30 நிமிடங்களாகும். பிப்ரவரி 27ஆம் தேதி முதல் பத்து வெள்ளிக்கிழமைகளில் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் யூடியூப் பக்கத்தில் இந்தத் தொடரின் புதிய பாகம் வெளியீடு காணும்.

