விமானப் பயணங்களுக்கான தேவை அதிகரித்து வருவதையொட்டி சிங்கப்பூர் விமானத்துறையில் கூடுதலான இளம்பெண்களை ஈர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்த வகையில், சிங்கப்பூர் குடிமை விமானப் போக்குவரத்து ஆணையமும் (CAAS) சிங்கப்பூர் விமானத்துறையின் பெண்கள் பிரிவு (WAI-SG) என்ற அமைப்பும் இணைந்து வியாழக்கிழமையன்று (அக்டோபர் 10) புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டன.
விமானத்துறை தொடர்பிலான நடவடிக்கைகளை இளம்பெண்களிடையே விளம்பரப்படுத்துவது, அத்துறையில் உள்ள பலதரப்பட்ட வேலை வாய்ப்புகளைப் பற்றிய விழிப்புணர்வை அவர்களிடையே ஏற்படுத்துவது போன்றவை அந்தப் புரிந்துணர்வுக் குறிப்பின் இலக்குகளாகும்.
மேலும், ஸ்டெம் எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்ட இளம்பெண்களை, அவை சம்பந்தப்பட்ட திறன்களை விமானத்துறையில் உபயோகிக்க ஊக்குவிப்பதும் புரிந்துணர்வுக் குறிப்பின் நோக்கமாகும்.
விமானத்துறையில் வலுவான தொடர்புகளையும் தொழில் ரீதியான உறவுகளையும் வளர்த்துக்கொள்ள சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், சிங்கப்பூர் விமானத்துறையின் பெண்கள் சகாப்தம் இரண்டும் இணைந்து செயல்படும்.
வியாழக்கிழமையன்று ஆர்ச்சர்ட் ஹோட்டலில் நடைபெற்ற இரவு விருந்து நிகழ்ச்சியில் புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்தானது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட், இந்தப் பங்காளித்துவம் சரியான நேரத்தில் இடம்பெறுவதாகக் கூறினார்.
“விமானத்துறை விறுவிறுப்பானது என்ற கருத்து தொடர்ந்து இளம் தலைமுறையினரிடையே இருக்க வேண்டும் என்பது எங்களின் எண்ணம். அதோடு, அடுத்த தலைமுறை விமானத்துறை ஆர்வலர்களுக்கு உகந்த திறன்கள் இருப்பதை உறுதிசெய்யவும் எண்ணம் கொண்டுள்ளோம்,” என்றார் திரு சீ.
விமானத்துறை ஊழியரணி, அத்துறையின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

