புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு இந்து அறக்கட்டளை வாரியம் சுமார் ஆறு பள்ளிவாசல்களுக்கு மார்ச் 7ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பேரீச்சம்பழங்களை வழங்கியது.
மொத்தம் 720 கிலோகிராம் எடையுள்ள பேரீச்சம்பழங்கள் ஆறு பள்ளிவாசல்களுக்குச் சரிசமமாக வழங்கப்பட்டன.
காலை ஒன்பது மணியளவில் டன்லப் சாலையில் உள்ள அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் தொடங்கி அதற்குப் பின்னர் அன்-நஹ்தா, அங்கூலியா, பென்கூலன், ஜாமிஆ சூலியா, பா’அல்வி என இதர ஐந்து பள்ளிவாசல்களுக்கும் பேரீச்சம்பழங்கள் வழங்கப்பட்டன.
ரமலான் மாதத்தில் நோன்பை நிறைவேற்றப் பேரீச்சம்பழங்களைப் பயன்படுத்துவது வழக்கமாகும். 2021ஆம் ஆண்டிலிருந்து அளிக்கப்படும் இந்த பேரீச்சம்பழ அன்பளிப்பு, முஸ்லிம் சமூகத்துக்கு மிகவும் அர்த்தமுள்ளது என்றார் இந்து அறக்கட்டளை வாரியத்தின் செயலவைக் குழுவினர் திருமதி சரோஜினி பத்மநாதன்.
“வெவ்வேறு சமூகத்தினர் ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் கைகொடுக்கும் இந்த உன்னதமான நோக்கம் சமூக ஒற்றுமையை வளர்க்கிறது,” என்றார் திருமதி சரோஜினி.
கடந்த ஐந்தாண்டுகளாக ரமலான் மாதத்தை முன்னிட்டு இந்து அறக்கட்டளை வாரியத்திலிருந்து பேரீச்சம்பழங்களைப் பெற்றுக்கொள்ளும் அங்கூலியா பள்ளிவாசல், இந்து சமய கொண்டாட்டங்களின்போது ஆலயங்களுக்குப் பழங்கள் வழங்குவதுண்டு என்று பகிர்ந்தார் அங்கூலியா பள்ளிவாசலின் இமாம் முகமது சர்புத்தீன் அப்துல்லா, 56.
“நம் நாடு சிறிதெனினும் நம் உள்ளங்கள் பெரிது. சமூகங்களுக்கு இடையே புரிந்துணர்வு, மரியாதை, பெருந்தன்மையைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது நம் சமுதாயத்திற்கு நன்மை அளிக்கிறது,” என்று மனம் நெகிழத் தெரிவித்தார் திரு அப்துல்லா.

