தற்போது குறைப்பிரசவம் ஏற்படக்கூடிய வாய்ப்புகளைக் கண்டறிவது பெண்களுக்கு சவாலாக இருந்து வருகிறது.
ஒருவருக்கு ஏற்கெனவே குறைப்பிரசவம் ஏற்பட்டுள்ளதா என்ற விவரத்தைக் கொண்டுதான் அதை அடையாளம் காண முடிகிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில், குறைப்பிரசவம் ஏற்படுவதைக் குறைக்கும் முயற்சிகளை எடுக்க 10 பேர்க் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பது, அதிக அபாயங்கள் இருக்கக்கூடிய பிரசவங்களைக் கையாள்வது ஆகியவற்றில் கைதேர்ந்த மருத்துவர்கள் அக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
கேகே மகளிர், சிறார் மருத்துவமனை, சிங்கப்பூர் பொது மருத்துவமனை ஆகியவற்றைச் சேர்ந்த அந்த மருத்துவர்கள் புதிய குறைப் பிரசவத் தடுப்புத் திட்டம் ஒன்றை இம்மாதம் உருவாக்கத் தொடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லா குறைப்பிரசவங்களின் தகவல்களையும் கொண்ட தரவுத் தளங்களை உருவாக்குவது அக்குழுவின் இலக்காகும். அதன் மூலம் குறைப்பிரசவம் தொடர்பிலான அபாயங்களை அடையாளம் காண்பது நோக்கம்.
அந்தத் தகவல்களைக் கொண்டு குறைப்பிரசவம் ஏற்படக்கூடிய சாத்தியத்தை அடையாளம் காண உதவும் சோதனை முறையை உருவாக்க மருத்துவர்க் குழு எண்ணம் கொண்டுள்ளது.
கரு உருவாகி 37 வாரங்கள் நிறைவடைவதற்கு முன்னரே பிறக்கும் குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறந்தவையாக வகைப்படுத்தப்படுகின்றன. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையின் உடல் உறுப்புகள் முழு வளர்ச்சி அடையாதிருக்க வாய்ப்புள்ளது.
பொதுவாக கரு உருவான சுமார் 40 வாரங்களில் ஒரு குழந்தை முழு வளர்ச்சியடைகிறது; பிறந்த குழந்தையின் எடை 2.5லிருந்து 4.5 கிலோகிராமுக்கு இடைப்பட்டிருக்கும்.
ஆண்டுதோறும் உலகளவில் 10% குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறக்கின்றன, அந்த எண்ணிக்கை 13.4 மில்லியனாகும். அவற்றில் 1 மில்லியன் குழந்தைகள் குறைப்பிரசவத்தினால் எழும் பிரச்சினைகளின் காரணமாக இறக்கின்றன.
5 வயதுக்குக்கீழ் உள்ள பிள்ளைகள் இறப்பதற்குக் குறைப்பிரசவம்தான் முக்கியக் காரணமாக இருந்து வருகிறது.
2023ஆம் ஆண்டு சிங்கப்பூரில் 8.2% குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறந்தன. அந்த விகிதம், 2014ஆம் ஆண்டு பதிவானதுடன் ஒப்பிடுகையில் 0.6% குறைவு.


