தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உக்ரேனிய முட்டைகள் மீட்டுக்கொள்ளப்படுவதாக அறிவிப்பு

1 mins read
a4e9687d-e394-4074-ba25-2dc7921fa272
உக்ரேனியப் பண்ணையில் இருந்து தருவிக்கப்பட்ட ‘சிஇயுஏ001’ என முத்திரையிடப்பட்டுள்ள முட்டைகளில் சல்மோனெல்லா கிருமி கண்டுபிடிக்கப்பட்டது. - படம்: சிங்கப்பூர் உணவு அமைப்பு

உக்ரேனியப் பண்ணையிலிருந்து தருவிக்கப்பட்ட முட்டைகளில் சல்மோனெல்லா நுண்கிருமி காணப்பட்டதால் அவை மீட்டுக்கொள்ளப்படுவதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த முட்டைகளில் ‘சிஇயுஏ001’ என முத்திரையிடப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட பண்ணை இந்தப் பிரச்சினையைச் சரிசெய்யும்வரை சிங்கப்பூருக்கு அது முட்டைகளை ஏற்றுமதி செய்ய இயலாது.

அந்த நுண்கிருமி முட்டையின் உள்புறம், தோல் என இரண்டிலும் இருக்கக்கூடும். பச்சை முட்டைகளிலும் முழுவதும் சமைக்கப்படாத முட்டைகளிலும் உயிர்வாழும் திறன் அதற்குண்டு. அதனால் வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

முதியோர், சிறு பிள்ளைகள், குறைவான நோய் எதிர்ப்புச் சக்தி உடையோர் இக்கிருமியால் தீவிரமாக பாதிக்கப்படுவர். நன்றாக சமைக்கப்பட்ட முட்டைகள் பாதுகாப்பானவை என்பதை ஆணையம் நினைவுறுத்தியது.

குறிப்புச் சொற்கள்