அறிவுத்திறன் குறைபாடு உள்ள 17 வயது சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய 37 வயது ஆடவருக்குக் கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 11 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
இந்த மாதத் தொடக்கத்தில் அந்த ஆடவர் அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
அந்தச் சிறுமியின் அடையாளத்தைப் பாதுகாக்க, குற்றவாளி, பாதிக்கப்பட்ட சிறுமி, சாட்சிகள் ஆகியோரின் பெயர்கள் வெளியிடப்பட முடியாது.
மாவட்ட நீதிபதி ஷைஃபுடின் சருவான் அந்த ஆடவருக்கு 10 ஆண்டுகள், 11 மாதங்கள், இரண்டு வாரங்கள் சிறைத்தண்டனையையும், 11 பிரம்படிகளையும் விதித்தபோது, அந்தச் சிறுமி அவளுடைய அறிவுத்திறன் குறைபாட்டால், மிக எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருந்ததாகக் கூறினார்.
“அந்தச் சிறுமி அறிவுத்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர் என்பதை குற்றவாளி அறிந்திருந்தார். அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, அச்சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார். அந்தப் பாலியல் துன்புறுத்தல் மிகக் கொடுமையானது,” என்றார் நீதிபதி.
ஒரு கட்டத்தில் சிறுமி மறுப்பு தெரிவித்தும், அந்த ஆடவர் தொடர்ந்து அச்செயலில் ஈடுபட்டதை நீதிபதி குறிப்பிட்டார்.
“அந்தப் பாலியல் துன்புறுத்தல், சிறுமிக்குப் பெரும் துயரத்தையும் மனவேதனையையும் கொடுத்துள்ளது,” என்று நீதிபதி கூறினார்.

