சிங்கப்பூரில் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டங்கள் புதன்கிழமை (மே 27) சிறப்புத் தொழுகைகளுடன் நடந்தேறின.
இறைவனின் கட்டளையை ஏற்று, அன்பு மகனைத் தியாகம் செய்யத் துணிந்த இப்ராஹிம் நபியின் ஈடு இணையற்ற தியாகத்தை நினைவுகூரும் வகையிலும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மேற்கொள்ளும் புனித ஹஜ் யாத்திரையின் நிறைவைக் குறிக்கும் விதத்திலும் தியாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
பென்கூலன் பள்ளிவாசலில், காலை 6.30 மணிக்கு ஃபஜ்ர் தொழுகையையும் பின்னர் தக்பீரையும் தொடர்ந்து 8 மணிக்கு ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்புத் தொழுகை இடம்பெற்றது. 150 பெண்கள் உட்பட ஏறத்தாழ 800 பேர் அதில் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து, தியாகத் திருநாளின் சிறப்புகளையும் முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூறும் ‘குத்பா’ பிரசங்கம் அரபியிலும் தமிழிலும் இடம்பெற்றது.
“தியாகம், இரக்கம், நன்றியுணர்வு உள்ளிட்ட மனித மாண்புகளின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் வகையில் இந்தப் பண்டிகை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை சமூகங்களுக்கிடையிலான பிணைப்பை வலுப்படுத்தி, நல்லிணக்க உணர்வை வளர்க்கவும் உதவுகிறது,” என்றார் பென்கூலன் பள்ளிவாசல் தலைவர் ஹாஜி மு.யூ. முஹம்மது ரஃபீக்.
இப்பண்டிகையில் ‘குர்பான்’ சடங்கை நிறைவேற்றி, இறைச்சியைப் பகிரும் வழக்கம் முக்கிய அங்கம் வகிப்பதை அவர் சுட்டினார்.
“சிங்கப்பூரர்கள் பலரும் வெளிநாடுகளில் அதனை நிறைவேற்ற நிதி கொடுத்து, ‘குர்பான்’ இறைச்சியின் பங்கை இங்குப் பெற்றுக்கொள்வர்,” என்றார் அவர்.
பலர் ஆஸ்திரேலியாவில் நிதியளித்து, ஒரு பங்கு இறைச்சியை வாங்கிக் கொண்டு மீதமுள்ளவற்றையோ, முழுமையாகவோ தேவையுள்ள மக்களுக்குச் சென்றடையும் வகையில் கொடுத்துவிடுவதையும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் காலையில் மூன்று அமர்வுத் தொழுகைகள் இடம்பெற்றன.
மூன்றாவது அமர்வில் ஆக அதிகமானோர் பங்கேற்றனர். ஒட்டுமொத்தமாக 5,000 பேர் அந்தத் தொழுகைகளில் கலந்துகொண்டனர்.
“‘ஈத் உல் அல்ஹா’ என்றும் அழைக்கப்படும் இந்நாள், மகனைத் தியாகம் செய்வதை விடுத்து, அதற்கு நிகராக ஆட்டினைப் பலியிடும்படி இறைவன் வலியுறுத்தியதை நினைவுகூர்கிறது,” என்றார் அப்துல் கஃபூர் பள்ளிவாசலின் இமாம் அஜீஜுல்லாஹ் ஹஸனி.
“அவ்வாறு பலியிடப்படும் ஆடு உள்ளிட்ட விலங்குகளின் இறைச்சி மூன்று பங்காக வகுக்கப்பட்டு, ஒரு பங்கைத் தாங்கள் வைத்துக்கொண்டு, மற்றொரு பங்கினை சுற்றத்தாருக்கும் இன்னொரு பங்கினை ஏழை எளியோர்க்கும் வழங்குவது வழக்கம்,” என்றார் இமாம் அஜீஜுல்லாஹ்.
அது கால்நடை வளர்ப்போர்க்கு வாழ்வாதாரத்தைப் பெருக்கி, ஏழைகளுக்கு உணவை உறுதிசெய்வதுடன், அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகவும் அவர் சொன்னார்.
குடும்பம், சுற்றத்தாருடனான பிரச்சினைகளை இயன்றவரை களைந்து ஒன்றிணைந்த பிறகு இந்நாளில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்வதையும் அவர் சுட்டினார்.
தற்போது உலக அளவில் சிக்கலான சூழல் நிலவுவதாக அவர் குறிப்பிட்டார்.
“1,400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, பல சிரமங்களைக் கடந்து நடந்து பலரும் ஹஜ் பயணம் மேற்கொண்டதாக வரலாறு கூறுகிறது. தற்போது நிலவும் இந்த நெருக்கடியான சூழலிலும் சிங்கப்பூரிலிருந்து 900 பேர் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளனர்,” என்றார்.
“இந்த நாளில் பல்வேறு நாடுகளிலிருந்து புனித ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ள அனைவருக்கும் அது சிறப்பானதாக அமைய வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்,” என்றார் பென்கூலன் பள்ளிவாசல் நிர்வாகக் குழுவின் செயலாளரும் ஆசிரியருமான அஜ்மல் கான், 46.
சிங்கப்பூரில் பலரும் குடும்பத்தினர் உறவினரைச் சந்தித்து வாழ்த்துகளைப் பறிமாறிக்கொள்வது வழக்கம் என்றும் அவர் சொன்னார்.
“தொழுகையில், தமிழர் மட்டுமின்றி, பங்ளாதேஷ், பாகிஸ்தான், மியன்மார் எனப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோர் பங்கேற்று வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டது சிறப்பு,” என்றார் பென்கூலன் பள்ளிவாசலைச் சேர்ந்த ஹசன் மொகைதீன்.
“காலை 5.30 மணிக்கே பள்ளிவாசல் வந்துவிட்டேன். இங்கு நண்பருடன் வந்து தொழுகை மேற்கொண்டு பிறரைச் சந்தித்து வாழ்த்துகளைப் பகிர்ந்தேன். இது மகிழ்ச்சியான நாள்,” என்றார் பீஷான் குடியிருப்பாளர் அப்துல் கலாம் அப்துல் ரஹ்மான், 74. தொடர்ந்து தமது மகளைச் சந்திப்பது, உரையாடுவது வழக்கமென்றும் அவர் சொன்னார்.
“இந்நாளில், பல்லினச் சமூகத்தில் வாழும் நாம், குறிப்பாக இளம் தலைமுறையினர் நமது கலாசாரத்தையும் பிறரது கலாசாரத்தையும் அறிந்துகொண்டு அவற்றை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்,” என்றும் அவர் சொன்னார்.
தமது குடும்பத்தினருடன் தொழுகையில் ஈடுபட்ட கமாலுதீன், 40, “பெருநாள் வாழ்த்துகளைப் பரிமாறினோம். நாங்கள் இங்கும் இந்தியாவிலும் குர்பான் சடங்கிற்கு நிதி கொடுத்துள்ளோம். மொழி, தேச வேறுபாடின்றி, உலகெங்கிலும் மார்க்க நம்பிக்கை ஒன்றுதான். அதன் சிறப்புகளை இளம் பிள்ளைகள் உணர வேண்டும்,” என்றார்.
“பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அப்துல் கஃபூர் பள்ளிவாசலுக்கு வருகிறேன். இன்று குடும்பத்துடன் நீண்ட நேரம் இருப்போம். குறைந்தது 20, 30 பேருடன் இணைந்து கொண்டாடுவோம்,” என்றார் பூன் கெங் குடியிருப்பாளர் முகமது இக்பால், 70.
இந்தியாவிலிருந்து வந்து பத்தாண்டுகளாகச் சிங்கப்பூரில் பணியாற்றும் ஜஃபருல்லா அபாஸ், “குடும்பத்தை விட்டுப் பிரிந்து இங்குக் கொண்டாடுகிறேன். அவர்களுக்காகத்தான் இங்குப் பணியாற்றுகிறேன். அவர்களின் பிரிவு வேதனையளித்தாலும் இங்கு நண்பர்களுடன் கொண்டாடுவது மகிழ்ச்சியைத் தருகிறது,” என்றார்.

