தீவு விரைவுச்சாலை விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட எண்மர் காயம்

1 mins read
80e4ce50-3181-4c95-9895-cc00a86fae4e
விபத்தில் சேதமடைந்த மோட்டார்சைக்கிள், கார். படங்கள்: சாவ் பாவ் -

தீவு விரைவுச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை (ஜனவரி 15) நிகழ்ந்த கார் விபத்தில் ஒரு வயதுக் குழந்தை உட்பட எட்டுப் பேர் காயமடைந்தனர். சாங்கியை நோக்கிச்செல்லும் தீவு விரைவுச்சாலையில் லோர்னி ரோடு வெளிச்சாலைக்கு முன்பு வேன், கார் மற்றும் மோட்டார்சைக்கிள் மோதிக்கொண்டன.

காருடன் மோதுவதற்கு முன் அந்த வேன், மோட்டார்சைக்கிளுடன் மோதியது. காரின் பின் இருக்கையில் பயணிகள் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. சிங்கப்பூர் குடிமை தற்காப்புப் படை அவர்களை மீட்டதாக விபத்தை நேரில் பார்த்தவர் சாவ் பாவ் சீன நாளிதழிடம் கூறினார்.

இந்த விபத்து பற்றி காலை 9.43 மணிக்கு காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அந்த காரில் இருந்த மூவர், 29-69 வயதுக்கு இடைப்பட்டவர்கள். சிங்கப்பூர் குடிமை தற்காப்புப் படை அவர்களை டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.

இந்த விபத்தில் ஐவருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டனர். 46 வயது ஆண் வேன் ஓட்டுநர், 26 வயது பெண் மோட்டார்சைக்கிளோட்டி, 34 வயது ஆண் கார் ஓட்டுநர், காரில் இருந்த 27 வயது பயணி, ஒரு வயது குழந்தை ஆகியோர் அந்த ஐவர்.

விபத்து குறித்து விசாரணை தொடர்கிறது.