சிங்கப்பூர் கடற்பகுதியில் எட்டு அறிவார்ந்த மிதவைகள் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டிலிருந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கடலில் பாதுகாப்பை வலுப்படுத்த சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் மேற்கொள்ளும் முயற்சிகளில் இது ஒரு பகுதியாகும்.
மிதவைகளில் உணர்கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும்.
கடலின் நீரோட்டம் போன்றவற்றின் தொடர்பான தரவுகளை அவை சேகரிக்கும். இந்தத் தரவுகளைக் கொண்டு சிங்கப்பூரின் கடற்பகுதியை ஆணையம் கண்காணிக்கும்.
“கடலில் பாதுகாப்பான பயணத்துக்கு ஆதரவு வழங்கும் மின்னிலக்கக் கண்காணிப்புக் கருவிகளாக இந்த அறிவார்ந்த மிதவைகள் உதவும்,” என்று போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) தெரிவித்தார்.
கொன்ரேட் சிங்கப்பூர் மரினா பேயில் நடைபெறும் ‘இன்டர்நேஷனல் சேஃப்டி@சீ’ வாரம் நடைபெறுகிறது. அதில் கலந்துகொண்ட திரு முரளி, ஆணையத்தின் திட்டங்கள் குறித்து தகவல் அளித்தார்.
அறிவார்ந்த மிதவைகளிலிருந்து பெறப்படும் தரவுகளைக் கொண்டு கப்பல் போக்குவரத்து நிர்வகிக்கப்படும் என்று ஆணையம் கூறியது.
“சிங்கப்பூருக்குப் பலவகையில் பலன் அளிக்க அறிவார்ந்த மிதவைகளிலிருந்து பெறப்படும் தரவுகள் அரசாங்க அமைப்புகள், உயர் கல்வி நிலையங்கள், ஆய்வுக் கழகங்கள் ஆகியவற்றுடன் பகிர்ந்துகொள்ளப்படலாம்,” என்று ஆணையம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் துறைமுகத்துக்கு உட்பட்ட கடற்பகுதியில் மிதவைகள் பொருத்தப்படும்.
அப்பகுதியில் கப்பல் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்றும் கிடைக்கும் தரவுகள் பெரிதும் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
எதிர்காலத்தில், மோசமான வானிலை குறித்து கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்க இந்த அறிவார்ந்த மிதவைகள் பயன்படுத்தப்படக்கூடும் என்று திரு முரளி கூறினார்.
கடல்துறை சந்திக்கும் சவால்கள் பற்றியும் அவர் பேசினார். மோசமடைந்துள்ள புவிசார் அரசியல் பதற்றநிலை, பருவநிலை மாற்றம் ஆகியவற்றை அவர் உதாரணங்களாகக் காட்டினார்.