துன்புறுத்தலில் குழந்தை மரணம்: பெற்றோருக்கு 15 ஆண்டுகளுக்குமேல் சிறை

துன்புறுத்தலில் குழந்தை மரணம்: பெற்றோருக்கு 15 ஆண்டுகளுக்குமேல் சிறை

படம்: கேன்வா

21 Oct 2026 - 11:38 am

2 mins read

எட்டு மாதக் குழந்தையாக இருந்த தங்கள் மகனைத் தொடர்ந்து துன்புறுத்தி, அவன் உயிரிழக்கக் காரணமான இளம் தம்பதியருக்கு உயர் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அந்தக் குழந்தையின் தாயார் குளோயி கான் சி சுவான், 23, என்பவருக்கு 15 ஆண்டுகள் 3 மாதச் சிறைத்தண்டனையும் தந்தை நியோ ஜியா மிங், 27, என்பவருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டன.

உயிரிழந்த குழந்தையின் பெயர் டிரெவர் நியோ யூ ஹின்.

மகனைத் துன்புறுத்துகிறோம் என்று தெரிந்தும் பெற்றோர் அச்செயல்களில் ஈடுபட்டனர் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

டிரெவர் அழுவதை நிறுத்துவதற்காக, அவனை வழக்கமாக உலுக்கியதையும் அவனது வாய் மற்றும் மூக்கைப் பொத்தியதையும் அக்டோபர் 12ஆம் தேதி பெற்றோர் இருவரும் ஒப்புக்கொண்டனர். குழந்தையைப் பலமாக உலுக்குவதன் மூலம் அதன் அழுகையை நிறுத்த முடியும் என்பதை தமது கணவரிடமிருந்து கான் தெரிந்துகொண்டார்.

நியோ, தமது மனைவி கானைப் பலமுறை தாக்கியதற்காக, அவர் மீது கூடுதலாக ஒரு குடும்ப வன்முறைக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருந்தது.

தாயாரான கான், குழந்தையை பலமுறை அடித்ததால் அவனது உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டன. அதேபோல, தந்தை நியோ அந்தக் குழந்தையை அறைந்ததோடு அவன் வாயில் விரல்களை நுழைத்தார். குழந்தையின் விரல்களை மீண்டும் மீண்டும் கிள்ளினார் அவர்.

துன்புறுத்தல் குறித்து அந்தத் தம்பதியினர் குறுஞ்செய்திகளைப் பரிமாறிக்கொண்டனர். மேலும், உலுக்குவதால் குழந்தைக்கு மூளைப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கேலி செய்தனர்.

2024 செப்டம்பர் 1ஆம் தேதி இரவு, தாயாரான கான் தனது குழந்தையைத் துன்புறுத்தி, அவன் முகத்தில் அடித்து, மெத்தையில் குப்புறப் படுக்க வைத்த வேளையில் அவன் உயிரிழந்ததாக நீதிமன்ற விசாரணையில் குறிப்பிடப்பட்டது.

டிரெவர் இறந்துவிட்டதாக பின்னிரவு 12.20 மணியளவில் கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் அறிவிக்கப்பட்டது.

குழந்தை டிரெவர் உயிரிழப்பதற்கு முன்பு, தம் வாழ்நாளின் பெரும்பகுதியைத் துன்புறுத்தலில் கழித்தார் என்று நீதிபதி ஹூ ஷியாவ் பெங் தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

அவர் தீர்ப்பை வாசித்தபோது குழந்தையின் தாயான கான் நீதிமன்றத்தில் அழுதார்.

இளந்தம்பதியர் மற்றும் போதிய அனுபவமின்மை என்று இருந்தபோதிலும் அவர்கள் தங்கள் செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றார் நீதிபதி.

கொடிய செயல்களைச் செய்தது தன் மனைவிதான் என்றும் அவரது குற்றத்தைவிட தனது ஒட்டுமொத்தக் குற்றப்பங்கு மிகவும் குறைவு என்றும் நியோ வாதிட்டார்.

ஆனால், ஒரு குழந்தையின் மரணத்தை அனுமதிப்பவர், அதற்குக் காரணமானவரைவிட குறைவான குற்றப்பங்கு உடையவர் எனக் கூறமுடியாது என்று நீதிபதி ஹூ தெளிவுபடுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
குழந்தைமரணம்சிறை