பொதுத் தேர்தலில் போட்டியிடும் எட்டு அரசியல் கட்சிகள், தொலைக்காட்சியிலும் வானொலியிலும் பிரசாரச் செய்திகளை ஏப்ரல் 25 மற்றும் மே 1ஆம் தேதிகளில் ஒலி, ஒளிபரப்ப முடியும்.
ஒவ்வொரு கட்சிக்கும் இரண்டு ஒலி, ஒளிபரப்புகளையும் ஆறு மீடியாகார்ப் ஒளிவழிகளும் 13 மீடியாகார்ப், எஸ்பிஎச் மீடியா, சோ டிராமா! என்டர்டெயின்மண்ட் வானொலி நிலையங்களும் மேற்கொள்ளும் என தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் வியாழக்கிழமை (ஏப்ரல் 24) தெரிவித்தது.
கட்சிகள் தங்களது அரசியல் ஒலிபரப்பை ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் ஆகிய நான்கு அதிகாரத்துவ மொழிகளிலோ அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றிலோ வழங்கலாம். ஒலி, ஒளிபரப்புகளை வழங்க எட்டு அரசியல் கட்சிகள் மட்டுமே தகுதிபெறுவதாக ஆணையம் கூறியது.
தேர்தல் துறையால் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, அங்கீகரிக்கப்பட்ட கட்சிச் சின்னத்தின்கீழ் குறைந்தது ஆறு வேட்பாளர்களைக் களமிறக்கும் கட்சிகள் மட்டுமே ஒலி, ஒளிபரப்புகளுக்குத் தகுதிபெறுகின்றன.
சுயேச்சை வேட்பாளர்களும் ஆறு வேட்பாளர்களுக்கும் குறைவானோரைக் களமிறக்கும் கட்சிகளும் அவற்றுக்குத் தகுதிபெற மாட்டா.
ஒவ்வோர் அரசியல் கட்சியும் களமிறக்கும் வேட்பாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, அதற்கான ஒலி, ஒளிபரப்பு நேரம் ஒதுக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்தது.
ஒவ்வோர் அரசியல் கட்சிக்குமான இரு ஒலி, ஒளிபரப்புகளுக்கும் ஒரே அளவிலான நேரம் ஒதுக்கப்படும் என்று அது கூறியது.