சிங்கப்பூரின் இரு நிலச் சோதனைச் சாவடிகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இதுவரை 241 வாகனங்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டிய வாடகை வாகனச் சேவை வழங்கிய குற்றத்துக்காகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் கடந்த இரண்டு வாரங்களில் நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) நடத்திய சோதனைகளில் அதே குற்றத்தைப் புரிந்த எட்டு வாகன ஓட்டுநர்கள் பிடிபட்டுள்ளனர்.
இதன் விவரங்களைப் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவேலிங் அவரது ஃபேஸ்புக் பதிவில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) வெளியிட்டார்.
அண்மைய அமலாக்க நடவடிக்கைகளில் ஆணையம் 5,000க்கும் மேற்பட்ட வாகனங்களை சோதனையிட்டது என்பதையும் அவர் தெரிவித்தார்.
நிலவழிச் சோதனைச் சாவடிகளிலும், சாங்கி வட்டாரத்திலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தேசிய தனியார் வாடகை வாகனச் சங்கம், தேசிய டாக்சி ஓட்டுநர் சங்கம் ஆகிய அமைப்புகள் வழக்கமாக வழங்கும் தகவல்களின் அடிப்படையில் சோதனைகள் நடத்தப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் அதன் ஃபேஸ்புக் பதிவில் விளக்கமளித்தது.
“நாங்கள் அமலாக்க நடவடிக்கைகளை கடுமையாக எடுத்துக்கொள்கிறோம். எல்லை தாண்டிய பயணங்களை மேற்கொள்வோரின் நலனுக்கும் உள்ளூர் வாகன ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதகாப்பாக இருப்பதற்கும் எங்களது நடவடிக்கைகள் உதவியாக அமைகின்றன,” என்று தேசிய வளர்ச்சி மூத்த துணையமைச்சருமாகிய சுன் ஷுவேலிங் கூறினார்.
செப்டம்பர் மாத விடுமுறைகள் நெருங்குவதால், முன்கூட்டியே பயணங்களைத் திட்டமிடும்படி கேட்டுக்கொண்ட அவர் உரிமம் பெற்ற ஓட்டுநர்களை மட்டுமே பயன்படுத்திக்கொள்ளும்படி பொதுமக்களுக்கு நினைவூட்டினார்.
சட்டவிரோத வாடகை வாகனச் சேவை வழங்குவோருக்கு $3,000 அபராதம், ஆறு மாத சிறை, வாகனங்கள் பறிமுதல் ஆகிய தண்டனைகள் விதிக்கப்படலாம்.


