பத்தில் எட்டு முதியவர்கள் தற்போது வசிக்கும் வீடுகளிலேயே மூப்படைய விருப்பம்: ஆய்வு

பத்தில் எட்டு முதியவர்கள் தற்போது வசிக்கும் வீடுகளிலேயே மூப்படைய விருப்பம்: ஆய்வு

2 mins read
d5dd7722-52e4-4132-8013-5b4199c0db81
நிலைத்தன்மை, பேட்டையில் உள்ள வசதிகள், சமூக ஒற்றுமை உள்ளிட்ட அம்சங்களால் மூத்தோர் அவர்கள் தங்கியிருக்கும் வீடுகளில் இருக்க விரும்புவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் பத்தில் எட்டு முதியவர்கள் தற்போது அவர்கள் தங்கியிருக்கும் வீடுகளிலேயே மூப்படைய விருப்பம் தெரிவித்துள்ளதாக சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகத்தின் ஆய்வு கூறுகிறது.

நிலைத்தன்மை, பேட்டையில் உள்ள வசதிகள், சமூக ஒற்றுமை உள்ளிட்ட அம்சங்களால் மூத்தோர் அவர்கள் தங்கியிருக்கும் வீடுகளில் இருக்க விரும்புவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு தொடர்ந்து நடந்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.

இந்த ஆய்வில் 6,020 சிங்கப்பூரர்கள் கலந்துகொண்டனர். அவர்களின் வயது 53க்கும் 79க்கும் இடைப்பட்டிருந்தது. ஆய்வு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டது.

ஆய்வு குறித்த தகவல்கள் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 22) சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் விவாதிக்கப்பட்டது.

தற்போது இந்த ஆய்வு மூத்தோர் வீடுகளைத் தாண்டி அவர்களின் பேட்டைகள் நோக்கி நகர்வதாக பேராசிரியர் பாலின் ஸ்ட்ராக்கன் கூறினார்.

மூத்தோரிடம் அவர்களது பேட்டைகளில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும், சமூகத்தில் தொடர்ந்து ஈடுபாட்டுடன் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த கேள்விகள் இனிவரும் ஆய்வுகளில் கேட்கப்படும் என்று பேராசிரியர் ஸ்ட்ராக்கன் தெரிவித்தார்.

தற்போது சேர்க்கப்பட்ட தரவுகளின் படி 70 விழுக்காடு மூத்தோர் தங்களுக்கு அருகில் மூத்தோர் பராமரிப்பு நிலையங்கள், துடிப்புடன் மூப்படையும் நிலையங்கள் முக்கியமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் அவர்களில் 50 விழுக்காட்டினர் மட்டும்தான் அந்த வசதிகளுக்கு அருகில் உள்ளனர். அதாவது 10 நிமிட நடைப் பயணத் தூரம். இந்த வசதிகள் மூத்தோருக்கு முக்கியம் என்பதை தரவுகள் காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறினர்.

சிங்கப்பூரில் மூத்தோருக்கான நடவடிக்கை நிலையங்கள் தொடர்ந்து கட்ட வேண்டும் என்று அவசியம் இல்லை. கடைத்தொகுதிகள், பூங்காக்கள், சமூக மன்றங்களில் மூத்தோருக்கான நடவடிக்கைகள் அவ்வப்போது நடந்தால் நன்றாக இருக்கும் என்று பேராசிரியர் ஸ்ட்ராக்கன் குறிப்பிட்டார்.

ஆய்வில் கலந்துகொண்ட மூத்தோரில் 80 விழுக்காட்டினர் ரயில், பேருந்து சேவைகள், மருத்துவ நிலையங்கள், சாப்பாட்டுக் கடைகள் உள்ளிட்டவை வீட்டிற்கு அருகில் இருப்பது முக்கியம் என்று தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்